தலாய் லாமாவின் 1300 வருட பழமையான அரண்மனையை சீரமைக்கிறது சீன அரசு

361 0

திபெத்தில் உள்ள தலாய் லாமாவின் பழைய அரணமனையை சீன அரசு சீரமைக்க உள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

திபெத் தன்னாட்சிப் பகுதியிலுள்ள பொட்டலா அரண்மனை, 1959-ம் ஆண்டு வரையில் தலாய் லாமாவின் பிரதம வசிப்பிடமாக இருந்தது. இப்போது இது நூதன காட்சிச்சாலையாகவும் உலகப் பாரம்பரியக் களமாகவும் உள்ளது.
அரண்மனை 3,700 மீட்டர் (12,100 அடி) உயரத்தில், லகாசா பள்ளத்தாக்கின் மத்தியில் சிவப்பு மலையின் பக்கத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த அரண்மனை 1694-ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. இதற்கு சுமார் 45 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த அரண்மனை “யு.எஸ்.ஏ டுடே” செய்தித்தாளால் புதிய ஏழு அதிசயங்களில் ஒன்று என பெயரிட்டப்பட்டது.
இக்கட்டிடங்களின் மத்திய பகுதி மிக உயரத்தில் பரந்த நாற்கோண பெரும்பரப்புக்கு உயர்ந்துள்ளது. மத்திய பகுதியில் உள்ள ஏனைய கட்டங்களிலிருந்து வேறுபட்ட செந்நிறப் பகுதி “சிவப்பு அரண்மனை” என அழைக்கப்படுகிறது. பிரதான மண்டபங்கள், பீடங்கள், முன்னைய தலாய் லாமாக்களின் சன்னதிகள் என்பன இங்குள்ளது. அங்கே உயர் அலங்கார ஓவியங்கள், அணிகல வேலைப்பாடுகள், சிற்பச் செதுக்கல்கள் உட்பட்ட பிற அலங்காரங்களும் அதிகமாகவுள்ளன.
1959-ம் ஆண்டு தீபத்திய புரட்சிக் காலத்தில் இந்த அரண்மனை சேதப்படுத்தப்பட்டது. கடந்த 1994-ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு இந்த அரணமனையை உலக பாரம்பரிய தளமாக அறிவித்தது. அதன்பின்னர் இந்த அரணமனை அதிக அளவிலான சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது. சென்ற ஆண்டு சுமார் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த அரணமனைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
இந்நிலையில், சேதமடைந்த அந்த அரண்மனை பகுதிகளை சரிசெய்ய சீனா அரசு முடிவெடுத்துள்ளது. அதற்காக சுமார் 10 கோடி ரூபாய் செலவிட இருப்பதாக சீனா அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தை தேசிய கலாச்சார பாரம்பரிய அமைப்பு அங்கீகரித்துள்ளது எனவும் கூறியுள்ளது.

Leave a comment