குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ள நிலையில் லண்டன் சென்றார் நவாஸ் ஷெரீப்

433 0

குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ள நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் மனைவியைக்காண பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லண்டன் புறப்பட்டு சென்றார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் வழக்குகளில் இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் 9-ந் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில் நேற்று அவர் லாகூரில் இருந்து லண்டனுக்கு பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்றார். அவரை அவரது தம்பியும், பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியுமான ஷாபாஸ் ஷெரீப் வழி அனுப்பி வைத்தார்.

9-ந் தேதி ஊழல் வழக்குகள் விசாரணைக்கு வருவதற்கு முன்பாக நவாஸ் ஷெரீப் லண்டனில் இருந்து திரும்பி விடுவாரா என்பது குறித்து அவரது கட்சி வட்டாரங்கள் உறுதி செய்யவில்லை. ஆனால் அவர் திரும்பி வருவதற்கான டிக்கெட்டில் தேதி ‘ஜனவரி-4’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதன் காரணமாக ஊழல் வழக்குகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுவதில் இருந்து தப்பிக்கத்தான் அவர் லண்டன் சென்றாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுபற்றி அவரது அரசியல் செயலாளர் ஆசிப் கர்மானி எம்.பி., பதில் அளிக்கையில், “உடல் நலமில்லாது இருக்கிற மனைவி குல்சூம் நவாசை சந்திப்பதற்காக அவர் லண்டன் புறப்பட்டு சென்றார். இதற்கு முன்பு நடந்ததுபோலவே, அவர் வழக்கு விசாரணையை சந்திக்க திரும்ப வருவார்” என்றார்.

நவாஸ் ஷெரீப்பின் மனைவி குல்சூம் நவாஸ், தொண்டை புற்றுநோய்க்கு 3 அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டு நலம் அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a comment