எல்லையோர தாக்குதல் விவகாரம் – பாகிஸ்தான் ராணுவ தளபதி தொடர் ஆலோசனை

391 0

இந்தியா-பாகிஸ்தான் எல்லையோர தாக்குதல் விவகாரம் குறித்து பாகிஸ்தான் ராணுவ தளபதி கமார் ஜாவேத் பஜ்வா பிராந்திய தளபதிகளுடன் தொடர் ஆலோசனை நடத்தினார்.

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருநாட்டு வீரர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்திய ராணுவ வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்துவதாகவும், இதில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதாகவும் பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவ தளபதி கமார் ஜாவேத் பஜ்வா, நேற்று முன்தினம் பிராந்திய தளபதிகளுடன் தொடர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், எல்லை பகுதியில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. காஷ்மீர் விவகாரம் குறித்தும் பேசப்பட்டது.

மேலும் இந்த கூட்டத்தில் கமார் ஜாவேத் பஜ்வாவின் ஆப்கானிஸ்தான் பயணத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. சமீபத்தில் ஆப்கானிஸ்தான் சென்றிருந்த அவர் அங்கு மூத்த தலைவர்களை சந்தித்து, இருநாடுகளுக்கு இடையே நிலவி வரும் புரிதலற்ற தன்மையை நீக்கி, நம்பிக்கையை மீட்டு கொண்டுவருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

ராணுவ தளபதி, பிராந்திய தளபதிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டம் சுமார் 7 மணி நேரம் நீடித்ததாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்த தொடர் ஆலோசனை கூட்டம் குறித்து ராணுவ தரப்பில் இருந்து உறுதிப்பூர்வமான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

Leave a comment