ஆட்சியை கவிழ்க்க சதி செய்யவில்லை; சபாநாயகர் நடுநிலையுடன் செயல்படவில்லை: ஐகோர்ட்டில் டிடிவி தரப்பு வாதம்

240 0

ஆட்சியை கவிழ்க்க சதி செய்யவில்லை என்றும், சபாநாயகர் நடுநிலையுடன் செயல்படவில்லை என்றும் ஐகோர்ட்டில் டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சபாநாயகர் தாக்கல் செய்த பதில் மனுவில், ஆட்சியை கவிழ்க்க 18 எம்.எல்.ஏ.க்களும் சதித்திட்டம் தீட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிடிவி தினகரன் தரப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி இதனை மறுத்து வாதாடினார். சபாநாயகர் தரப்பு குற்றச்சாட்டுக்களை மறுத்து அவர் கூறியதாவது:-

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான உத்தரவை எங்களுக்கு நேரடியாக வழங்காமல் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர், இரவில் அரசாணை வெளியிடப்பட்டது. தகுதிநீக்க விஷயத்தில் சபாநாயகர் நடுநிலை வகிக்க தவறிவிட்டார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை விட்டுக்கொடுத்தாக கொறடா கூறுவது தவறு. நாங்கள் அடிப்படை உறுப்பினர் பொறுப்பை விட்டுக்கொடுக்கவில்லை. இப்போதும் உறுப்பினர்களாகவே உள்ளனர். அரசை கவிழ்க்க நாங்கள் விரும்பவில்லை. ஊழலுக்கு துணைபோகும் முதல்வருக்கு மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தோம்.

பெயர், கையெழுத்து இல்லாத ஆவணம் மூலம் கொறடா புகாரில் தகுதி நீக்கம் நடந்துள்ளது. கொறடா கொடுத்த புகார் நகலை எங்களிடம் காண்பிக்கவில்லை. ஆனால், ஆட்சிக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ். அணிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கூட கொடுக்கவில்லை.

இவ்வாறு அவர் வாதாடினார்.

கையெழுத்திடாத ஆவணம் என சிங்வி கூறியதற்கு, கொறடா வழக்கறிஞர் ரோகத்கி கண்டனம் தெரிவித்தார்.

Leave a comment