யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உடனடித் தீர்வு வேண்டும் – சம்பந்தன்

5248 0

“முழு நாட்டினையும், அதன் மக்களையும் வெகுவாகப் பாதிப்புக்குள்ளாக்கிய நீண்டகால ஆயுதப் போராட்டத்தையும், கிளர்ச்சிகளையும் நாம் கண்டிருக்கிறோம். அவற்றால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்களே. அவர்கள் தமது அடையாளத்தையும், கௌரவத்தையும் காப்பாற்றிக்கொள்ள நீண்டகாலப் போராட்டங்களை நடாத்தி வந்துள்ளனர். ஆயுதப் போராட்டத்திற்கான காரணங்களாக அமைந்த விடயங்கள் இன்னமும் நீடிப்பதனால் அவற்றிற்கு விரைவாகத் தீர்வு காணப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் 70 வருட பூர்த்தி நிகழ்வில் கலந்தகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“ எமது நாட்டில் நிலவிய மிகவும் ஆபத்தான நிலைமைகளிலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக் கொண்டுள்ளோம். நாட்டுப்பற்று என்ற பெயரில், சரியாகச் சொன்னால் போலி நாட்டுப் பற்றின் அடிப்படையில் யாராவது இத்தகைய மோசமான நிலைமைகளை மேலும் தொடர முயற்சிப்பார்களாயின், அது பெரும் சோகமாகவே முடியும். முன்பு இருந்த நிலைமைகளோடு ஒப்பிடும்போது தற்போதைய நிலையில் சில குறைபாடுகள் காணப்பட்டாலும், கூடுதலான அமைதியும் சுமுகநிலைமையும் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும்,“கடந்த 70 வருட காலமாக நாங்கள் தேர்தல் முறையூடாக ஜனநாயக ஆட்சியைக் காப்பாற்றி வந்திருக்கின்றோம் என்றாலும், அது குறை காணப்படாத, பூரணமானதாக இருக்கவில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தேர்தல் வழிமுறை மட்டும் ஜனநாயக ஆட்சி முறையை உறுதிப்படுத்த மாட்டாது என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பெரும்பான்மைவாதத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்குச் சேவை செய்வதையே பெரும்பாலும் தேர்தல் முறைமை தன்னகத்தே கொண்டுள்ளது.
“ஐக்கியமான, பிளவுபடாத, பிரிக்க முடியாத நாட்டில் ஐக்கியப்பட்ட மக்களாக முன்னோக்கிச் செல்லவே நாம் முயற்சிக்கிறோம். இந்த விடயத்தில் ஏற்காமை எதுவும் இருக்கும் என நான் எண்ணவில்லை. இலங்கை வெற்றியடைய வேண்டும் என்ற எமது விருப்பம் நிறைவேற வேண்டுமாயின், அந்தக் குறிக்கோளை அடைய நாம் அனைவரும் ஐக்கியமாகச் செயற்பட வேண்டியதே அவசியமாகும்”என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment