ரோஹிங்யா அகதிகள் இலங்கைக்கு ஆபத்து – பிரபா கணேசன்

19905 0

ரோஹிங்யா அகதிகள் ஐ.நா.வில் பதிவு செய்யப்பட்டு இலங்கையில் தஞ்சமடைந்து கல்கிசை பகுதியில் தங்க வைத்து அவர்களை முஸ்லிம் அமைப்புகள் பராமரித்து வந்தமை இலங்கையில் மென்மேலும் இனங்களுக்கு இடையிலான முரண்பாட்டை தோற்றுவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது இலங்கையின் இறைமைக்கு பங்கம் விளைவிக்கும் என முன்னாள் பிரதி அமைச்சரும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே எமது நாட்டிற்குள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இனமுறுகல்கள் குறித்த அகதிகளின் வருகையினால் மென்மேலும் அதிகரிக்கவே வாய்ப்பிருக்கின்றது.

மனிதாபிமான முறையில் இவர்களை பாதுகாப்பது என்பது சிறந்த விடயமாகும். இருப்பினும் எமது நாட்டில் நிலப்பரப்புகளை ஒப்பிடும் பொழுது சனத்தொகை செறிவு அதிகமாக உள்ளது.

இதற்கு அப்பால் இவர்களை எமது நாட்டிற்குள் தஞ்சமடைய வைத்து செயல்படுத்துவதின் ஊடான முஸ்லிம் சமூகத்திற்கே அதி கூடிய பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். இவர்களுக்கு தஞ்சமடைய இடம் கொடுப்பதன் மூலமாக இன்னும் பல இலட்ச அகதிகள் இந்நாட்டிற்கு உட்பிரவேசிக்க கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன.

இதன் ஊடாக முஸ்லிம் மக்களின் விகிதாசாரத்தை அதிகரித்து அரசியல் இலாபம் தேடிக் கொள்ள இன்றைய முஸ்லிம் அமைச்சர்கள் செயல்பட்டு வருகின்றார்கள். இது கண்டனத்துக்குரிய விடயமாகும். இன்று இவர்களுக்காக குரல் எழுப்பும் சிறுபான்மை அரசியல் தலைவர்களும் ஓரிரு பெரும்பான்மை அரசியல் தலைவர்களும் இவ்விடயத்தினால் நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை பற்றி கருதுவதில்லை.

இதனை நாட்டில் வாழும் முஸ்லிம் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இன்று நாட்டில் வாழும் சிறுபான்மையின மக்களாகிய முஸ்லிம் மக்களுக்கு அவர்களுக்கான உரிமையினை முஸ்லிம் தலைவர்களால் பெற்றுக் கொடுக்க முடியாதுள்ளது.

அதற்கு அப்பாற் சென்று இந்த அகதிகளின் ஊடாக பல இலட்சம் அகதிகளை இந்த நாட்டிற்குள் கொண்டு வந்து முஸ்லிம்களின் விகிதாசாரத்தை அதிகரித்துக் கொள்வதற்கான வேலைதிட்டத்தினையே இவர்கள் செய்கின்றார்கள்.

எது எவ்வாறாயினும் நாட்டில் வாழும் முஸ்லிம் மக்கள் தமிழ் பேசும் மக்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தமிழ் சிங்கள மொழி அறியாத முஸ்லிம் அகதிகளின் வருகையின் ஊடாக முஸ்லிம் மக்களின் விகிதாசாரத்தை அதிகரிக்க முயல்வது கண்டனத்துக்குரியது.

Leave a comment