பாடசாலை மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தும் தரப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை

205 0

பாடசாலை நேரப் பகுதியில் பாடசாலை மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தும் தரப்பினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலைமைகளை பாடசாலையின் அதிபருக்கு கட்டுப்படுத்த முடியாமல் போனால் , காவற்துறையினர் உதவியை பெற்றுக்கொள்ள முடியும் என அந்த அமைச்சு இன்று வௌியிட்டு செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் காவற்துறை மா அதிபரை தௌிவு படுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில தொழிற்சங்கங்கள் மற்றும் மாணவர் குழுக்கள் பாடசாலையினுள் நுழைந்து கல்விச் செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதத்தில் மாணவர்களை ஆர்ப்பாட்டங்களுக்கு இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக கல்வி அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதற்கு முன்னர் , இந்த நிலைமையை தடுப்பதற்காக கடந்த பெப்ரவரி 27ம் திகதி சுற்றறிக்கையொன்று வௌியிடப்பட்டதாக அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும் , பல்வேறு தரப்பினர்களால் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவது குறித்து அறியக்கிடைத்துள்ளதாகவும் , இதனுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment