செய்ட் ராட் அல் ஹூஸைனை இலங்கை ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்

243 0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹூஸைனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் வெள்ளிக்கிழமை சந்திக்கவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்கும் ஜனாதிபதி, இன்று உரையாற்ற உள்ளார்.

இதையடுத்து, உலகின் முக்கிய நாடுகளின் தலைவர்களையும் அவர் சந்திக்க உள்ளார்.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருடனும், ஜனாதிபதி சந்திப்பொன்றை மேற்கொள்ள உள்ளார்.

இந்தச் சந்திப்பு இலங்கைக்கு மிகவும் முக்கியமானதாக அமையவிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜெனீவா பிரேரணை அமுலாக்கம் மற்றும் மறுசீரமைப்பு போன்ற விடயங்களில் இலங்கை அரசாங்கம் பெரும் தாமதத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இது தொடர்பில் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ள மனித உரிமைகள் ஆணையாளர், குறித்த விடயங்களை அமுலாக்குவதற்கான காலஅட்டவணையுடன் கூடிய திட்டத்தை தயாரிக்குமாறு கோரி இருந்தார்.

இந்த நிலையில், அவரை சந்திக்கும் ஜனாதிபதி, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் முதலான விடயங்களில் அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் குறித்து விளக்கமளிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக, அண்மையில் அமுழுக்கு கொண்டுவரப்பட்ட காணாமல்போனோர் தொடர்பான பணியகம் குறித்து, அதன் செயன்முறைகளின் அமுலாக்கம் குறித்தும மனித உரிமைகள் ஆணையாளருக்கு ஜனாதிபதி விளக்கமளிப்பார் என்றும் குறிப்பிடப்படுகிறது.

Leave a comment