நாடு முழுவதும் மின் வினியோகம் சீரான முறையில் நடைபெற்று வருவதாகவும், மின்சார சபை ஊழியர்களின் வேலை நிறுத்தம் தோல்வியடைந்திருப்பதையே இது காட்டுகிறது என்றும் மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
தமக்குக் கிடைத்திருக்கும் அறிக்கைகளின்படி, மின் உற்பத்தி மற்றும் பரிமாற்றம் நூறு சதவீதம் சீராக நடைபெற்றிருப்பதாகத் தெரிவித்த அமைச்சர், நாடளாவிய ரீதியில் 65 சதவீத மின் வினியோகம் சீராக நடைபெறுவதாகவும், மிகச் சில பகுதிகளில் மின் தடை ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
“மருத்துவ அதிகாரிகளின் கோரிக்கைகளையும் பரிசீலிக்காது நோயாளிகளின் உயிருடன் விளையாடும் வகையில், தேசிய வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர்களை மின்சார சபை தொழிற்சங்கம் விலக்கிக்கொண்டுள்ளதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற மனிதத்தன்மை இல்லாத வேலை நிறுத்தத்தில் பங்கேற்காத இலங்கை மின்சார சபை ஊழியர்களை எனது அமைச்சரவை சார்பில் பாராட்டுகிறேன்” என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, வேலை நிறுத்தத்தில் குதித்துள்ள ஊழியர்கள் சிலர் ட்ரான்ஸ்ஃபோர்மர்களுக்குச் சேதம் விளைவித்து வருவதாகவும், இது குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் இலங்கை மின்சார சபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
ஓய்வுபெற்ற மின்சார சபை ஊழியர்களைப் பணிக்கு அழைத்திருப்பதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்திருந்தபோதிலும், அவ்வாறான அழைப்பு எதுவும் தமக்குக் கிடைக்கவில்லை என்றும், அழைப்புகள் கிடைத்தாலும் அவற்றை ஏற்கப் போவதில்லை என்றும், ஓய்வுபெற்ற மின்சார சபை ஊழியர் சங்கம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.