அடுத்து வரும் மூன்றாண்டுகளுக்கு அரசின் செயற்ப்பாடு என்ன ? மைத்திரி, ரணில்

9682 0

தேசிய அரசின் அடுத்த மூன்று வருடங்களுக்கான பொருளாதார அபிவிருத்தி, கொள்கைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் நாளை விளக்கமளிக்கவுள்ளனர்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மேற்படி விளக்கமளிக்கும் நிகழ்வு நாளை முற்பகல் 11 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இரண்டு வருடங்கள் தேசிய அரசியல் தொடரும் வகையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தது.

முன்னாள் அரசின் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை,
சர்வதேச உறவுப் பாலத்தையும் இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையையும் மறுசீரமைத்தல்,ஐ.நா. தீர்மானத்துக்கு முகங்கொடுத்தல்.

நாட்டில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல்,அதிகாரப்பரவலாக்கலுடன் கூடிய புதிய அரசமைப்பொன்றை கொண்டுவருதல் போன்ற சவாலான விடயங்களுடன் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தல்

தேசிய அரசின் பிரதான இலக்காகவும் கொள்கைப் பிரகடனமாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அரசியல் மறுசீரமைப்பு விடயத்தில் தேசிய அரசு எதிர்பார்த்த இலக்குகளில் 50வீதமானவை வெற்றி கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால், பொருளாதார ரீதியில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் எதனையும் முன்னெடுக்கக்கூடிய வகையில் இலங்கையில் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையில் இருந்திருக்கவில்லை.

முன்னாள் அரசின் காலத்தில் பெறப்பட்ட கடன்கள் காரணமாக அரசின் கடன்சுமை 9,500 கோடியை தாண்டிவிட்டது. தனிநபர் கடனும் 4 லட்சம் வரையில் உயர்ந்துள்ளதாக மத்திய வங்கியின் கடந்த ஆண்டு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

கடன் சுமைகளைக் குறைத்துக் கொள்ளும் நோக்கிலேயே முன்னாள் அரசின் காலத்தில் சீனாவின் பாரிய கடன்தொகையில் நிர்மாணிக்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம் என்பன மீண்டும் குத்தகைக்கு வழங்கப்படுகின்றன.

இவ்வாறான சவால்களுக்கு மத்தியில் அரசு பொருளாதார அபிவிருத்தியை நீண்டகால இலக்கு மற்றும் திட்டமிடலுடன் கூடிய வகையில் முன்னெடுத்து வருகிறது.

அதன் முதற்கட்டமாக பலம்மிக்கதோர் இலங்கை, நிலைபேண்தகு அபிவிருத்தி குறித்த வரைபுகளை பிரதமரும், ஜனாதிபதியும் இவ்வருட ஆரம்பத்தில் தெளிவுபடுத்தியிருந்தனர்.

அதன் அடுத்த கட்டமாக அடுத்து வரும் மூன்றாண்டுகளில் தேசிய அரசு அடையவுள்ள பொருளாதார அபிவிருத்திக்கு தேசிய அரசு வகுத்துள்ள திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதியும், பிரதமரும் விளக்கமளிக்கவுள்ளனர்.

Leave a comment