அமெரிக்காவினுள் சிகரெட் கடத்தி செல்ல முயற்சித்த 2 இந்தியர்கள் சிக்கினர்

252 0

அமெரிக்காவினுள் சிகரெட் கடத்தி செல்ல முயற்சித்த 2 இந்தியர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானால் தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது.

அபிஷேக் சுக்லா, ஹரிஷ் ஷாபாய் பாஞ்சால் ஆகிய இருவரும் இந்தியர்கள். இவர்கள் ஜூபிளி டுபாக்கோ இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன், பெலிக்கான் டுபாக்கோ இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற 2 நிறுவனங்களின் பெயரால், அமெரிக்க நாட்டுக்குள் கள்ள சிகரெட்டுகளை கடத்திச் செல்ல முயற்சித்துள்ளதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக அவர்கள் மீது அங்குள்ள மியாமி பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இவர்கள் 20 அடி நீள கன்டெய்னரில் கப்பல் மூலமாக இந்தியாவில் இருந்து மியாமிக்கு கள்ள சிகரெட்டுகளை கடத்திச் செல்ல முற்பட்டுள்ளனர். இதற்கான தொகை இந்தியா மற்றும் துபாயில் உள்ள வங்கிக்கணக்குகள் வழியாக செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 1-ந் தேதி சிகரெட் கன்டெய்னர் மியாமி போய் சேர்ந்தபோது, அங்குள்ள துறைமுகத்தில் சுங்கத்துறை மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளிடம் சிக்கியது. இதன் உத்தேச மதிப்பு 1.2 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 7 கோடியே 80 லட்சம்) ஆகும்.

அதன் பிறகு மறுபடியும் மியாமிக்கு 3.2 மில்லியன் டாலர் மதிப்பிலான (சுமார் ரூ.20 கோடியே 80 லட்சம்) சிகரெட் கடத்தப்பட்டுள்ளது.

இப்போது அபிஷேக் சுக்லா, ஹரிஷ் ஷாபாய் பாஞ்சால் இருவரும் சட்டத்தின் பிடியில் மாட்டிக்கொண்டு விட்டனர்.இவர்கள்மீது முறைப்படி மியாமி பெடரல் கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானால் தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா 5 லட்சம் டாலர் (சுமார் ரூ.3¼ கோடி) அபராதமும் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

Leave a comment