கருப்பு பண ஒழிப்பில் இந்தியாவுக்கு உதவுவோம்: சுவிஸ் அதிபர் உறுதி

372 0

கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையில் இந்தியாவுக்கு உதவுவோம் என்று பிரதமர் மோடியிடம் சுவிஸ் அதிபர் உறுதி அளித்தார்.

சுவிட்சர்லாந்து அதிபர் டோரிஸ் லெத்தர்டு இந்தியாவுக்கு வந்துள்ளார். அவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

இருதரப்பு நலன்கள் மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதித்தனர். ரெயில்வே துறையில் ஒத்துழைப்பு தொடர்பாக 2 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் சிலர் தங்கள் கருப்பு பணத்தை போட்டு வைத்திருப்பதால், அந்த பணத்தை மீட்பது பற்றியும் சுவிஸ் அதிபருடன் பிரதமர் மோடி விவாதித்தார்.

அப்போது, சுவிஸ் அதிபர், ‘கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையில் இந்தியாவுக்கு உதவுவோம். வங்கிக்கணக்கு குறித்த தகவல்களை தானாக பகிர்ந்து கொள்வது தொடர்பான சட்டத்துக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் சுவிஸ் பாராளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அதையடுத்து, வங்கிக்கணக்கு குறித்த தகவல்கள் அடங்கிய முதல் தொகுப்பு, 2019-ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவிடம் அளிக்கப்படும். இந்த விஷயத்தில் இந்தியாவும், சுவிட்சர்லாந்தும் கைகோர்த்து செயல்படும்’ என்று உறுதி அளித்தார்.

இதுபற்றி பிரதமர் மோடி கூறுகையில், ‘பண பரிமாற்றத்தில் வெளிப்படைத்தன்மை என்பது உலகளாவிய சவாலாக உள்ளது. இவ்விஷயத்தில் இரு நாடுகள் இடையிலான ஒத்துழைப்பு தொடரும். கருப்பு பணமோ, அழுக்கு பணமோ, ஹவாலா பரிமாற்றமோ, ஆயுதம், போதைப்பொருள் தொடர்பான பணமோ எதுவாக இருந்தாலும் இரு நாடுகளிடையிலான ஒத்துழைப்பு தொடரும்’ என்றார்.

அணுசக்தி வினியோக குழுமத்தில் இந்தியாவை உறுப்பினராக சேர்க்க சுவிட்சர்லாந்து ஆதரவு அளிப்பதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார். ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பில் இந்தியா இணைவதற்கு உதவியதற்கும் நன்றி கூறினார்.

பருவநிலை மாற்றம் தொடர்பாக பாரீசில் நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தத்தை அமல்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இந்தியாவின் வளர்ச்சியில் பங்கெடுக்க சுவிஸ் தொழில் அதிபர்கள் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்று மோடி அழைப்பு விடுத்தார்.

இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததாக இரு தலைவர்களும் தெரிவித்தனர்.

Leave a comment