ஆசிய-பசிபிக் கடற்பகுதியில் அமெரிக்க கடற்படை செயல்பாடுகளால் ஆபத்து அதிகரிப்பு: சீனா விமர்சனம்

220 0

சிங்கப்பூர் கடற்பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல் சரக்கு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானதை தொடர்ந்து அமெரிக்க கடற்படை ஆபத்தானது என சீன ஊடகம் விமர்சனம் செய்துள்ளது.

சிங்கப்பூர் கடல் பகுதியில் மலாக்கா தீவு அருகே சென்று கொண்டிருந்த ஜான் மெக்கெயின் அமெரிக்க போர்க்கப்பல், லிபியாவை சேர்ந்த அல்னிக் என்ற சரக்கு கப்பலுடன் நேற்று திடீரென மோதி விபத்துக்குள்ளானது. இது இந்த ஆண்டு பசிபிக் கடற்பகுதியில் அமெரிக்க கப்பல் ஏற்படுத்திய நான்காவது விபத்தாகும். இந்த விபத்தில் அமெரிக்க கப்பலில் இருந்து 10 வீரர்கள் மாயமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 5 பேர் காயடைந்தனர்.
அதைத்தொடர்ந்து மாயமான வீரர்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. தேடுதல் பணியில் அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், விபத்து ஏற்படுத்திய அமெரிக்க கடற்படை குறித்து சீன ஊடகம் ஒன்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. அந்த ஊடகம் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:-
இந்த விபத்து தொடர்பான விசாரணை முடிந்து நிலையான முடிவுக்கு வர இன்னும் பல நாட்கள் ஆகும். ஆனால் அமெரிக்க கடற்படை, ஆசிய – பசிபிக் கடற்பகுதியில் தனது செயல்பாடுகளை தொடங்கியதில் இருந்து அப்பகுதியில் வணிகரீதியான கடற்போக்குவரத்திற்கு பெரும் ஆபத்துகளை ஏற்படுத்துகிறது என்பதில் சந்தேகமே இல்லை.
ஆசிய கடலில் அமெரிக்காவின் கடற்படை ஒரு ஆபத்தான தடையாகி வளர்ந்து வரும் நிலையில், தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் சேர்ந்து தென் சீனக் கடலுக்காக ஒரு கோட்பாட்டை உருவாக்கும் கூட்டு முயற்சிகளில் சீனா ஈடுபட்டு வருகிறது. மேலும் சீனாவின் தீவுகளில் பாதுகாப்பிற்காக ஐந்து கலங்கரை விளக்கங்களை சீனா அமைத்துள்ளது.
இவ்வாறு அந்த ஊடகம் கூறியுள்ளது.அதிக பாதுகாப்பு வசதிகள் உள்ள போதும் விபத்து எவ்வாறு நேர்ந்தது என மக்கள் யோசனை செய்வார்கள் எனவும் அந்த ஊடகம் கூறியுள்ளது.

Leave a comment