மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு டிக்கெட் மூலம் ரூ.35 கோடி வருமானம்

392 0

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு டிக்கெட் விற்பனை மூலம் ரூ.35 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் கூறினார்கள்.

சென்னையில் கோயம்பேடு – ஆலந்தூர், ஆலந்தூர் – பரங்கிமலை, விமானநிலையம் – சின்னமலை மற்றும் நேரு பூங்கா – விமான நிலையம் இடையே மெட்ரோ ரெயில் போக்குவரத்து நடந்துவருகிறது. இதில் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.

தொடர்ந்து சென்னையில் மெட்ரோ ரெயில் சேவையை விரிவுபடுத்தும் வகையில் விம்கோ நகர் வரையிலான பணிகளும் நடந்துவருகிறது. மெட்ரோ ரெயில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்ததன் மூலம் வருவாயும் அதிகரித்து உள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னையில் 2015-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை மாதம் வரை சுமார் 2 ஆண்டுகளில் 95 லட்சத்து 87 ஆயிரத்து 66 பேர் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.35 கோடியே 64 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

சுரங்கப்பாதையில் ரெயில் இயக்குவதற்கு முன்பாக தினசரி 12 ஆயிரம் முதல் 16 ஆயிரம் பேர் வரை மெட்ரோ ரெயிலை பயன்படுத்தி உள்ளனர். சுரங்கப்பாதையில் ரெயில் இயக்க தொடங்கியதற்கு பிறகு தற்போது ஒரு நாளைக்கு 22 ஆயிரம் முதல் 24 ஆயிரம் பேர் மெட்ரோ ரெயிலை பயன்படுத்துகின்றனர். பயணிகளை அதிகரிக்க பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.

சென்டிரல், எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலைய பணிகள் விரைவாக நடந்துவருகிறது. மேதின பூங்கா- தேனாம்பேட்டை- சைதாப்பேட்டை மார்க்கங்களில் ரெயில் போக்குவரத்துக்கான பணிகள் நடந்துவருகிறது. திட்டமிட்டபடி 42 கிலோமீட்டர் தூரத்துக்கான பணிகளும் நிறைவடைந்து மெட்ரோ ரெயில் சேவை தொடங்கினால் ஒரு நாளைக்கு 8 லட்சம் பேர் பயணம் செய்ய முடியும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Leave a comment