வட மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரனை பதவி துறக்குமாறு வலியுறுத்தியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான டெலோ கட்சியின் செயலாளர் சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று இடம்பெற்ற டெலோவின் தலைமைக்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு பதிலளிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வட மாகாண சபை முதல்வர் விக்னேஸ்வரனுக்கு கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு எதிராக டெனிஸ்வரன் மாத்திரம் கையெழுத்திட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் டெனீஸ்வரனின் நடவடிக்கைகள் கட்சியின் அனுமதி இன்றி தன்னிச்சையாக எடுக்கப்பட்டிருந்த காரணத்தினால் இது தொடர்பில் விளக்கமளிக்குமாறு கடிதமொன்றினை அனுப்பியுள்தாக அவர் குறிப்பிட்டார்.
முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையொப்பமிட்டமைக்கு காரணத்தை இரண்டு வாரங்களுக்குள் விளக்குமாறு குறிப்பிடப்பட்டபோதும் இதுவரையில் அவர் அதற்கான பதில் கடிதத்தை வழங்கவில்லை என சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற தலைமைக் குழு கூட்டத்தில் அவர் நேரில் சென்று விளக்கம் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அண்மையில் எதிர்க்கட்சிகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைய,
வடக்கு மாகாண அமைச்சரவையை மீள நிறுவுவதற்கு அமைச்சர் டெனீஸ்வரன் பதவி விலக வேண்டும் என்று அவரை வலியுறுத்தியுள்ளதாகவும் டெலோ அமைப்பின் செயலாளர் சிறிகாந்தா குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், அமைச்சர் பதவியில் இருந்து விலகுவது தொடர்பிலான தீர்மானத்தை இன்றைய தினம் அறிவிக்கவுள்ளதாகவும் சிறிகாந்த குறிப்பிட்டார்.
கட்சி நடவடிக்கையை மீறினார் என்ற ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு புறம்பாக இந்த வேண்டுகோள் அவருக்கு இன்று விடுக்கப்பட்டுள்ளது. அதனை பரிசீலிப்பதாகவும் முடிவை நாளை தான் அறிவிப்பதாகவும் டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவருடைய முடிவை பொறுத்துத்தான் ஒழுங்கு நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுப்பதா அவ்வாறு முன்னெடுத்து முடிவை எட்டுவதா அல்லது அந் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வருவதா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

