அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் தீபா அணி மீண்டும் மனு

211 0

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் தீபா அணியினர் மீண்டும் மனு அளித்துள்ளனர்.

அ.தி.மு.க. ஜெ.தீபா அணியின் தலைமை செய்தி தொடர்பாளர் பசும்பொன் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

குஜராத் மாநிலங்களவை தேர்தலில் பாஜக தலைவர் அமித்ஷாவின் சதி வேலைகளையும் தாண்டி காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேல் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அகமதுபடேலை தோற்கடிக்க வேண்டும் என்ற தனது சாணக்கிய தனத்தை எல்லாம் அரங்கேற்றி பார்த்த அமித்ஷா தற்போது அவமானகரமான முறையில் தோல்வியை தழுவியுள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா சட்டவிதிகளுக்கு முரணாக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும் தொடர்ந்து அதிகார வேட்கை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வந்த ஓபிஎஸ் இவர்களிடையே ஏற்பட்ட அதிகாரபோதை போட்டியால் இரட்டை இலை சின்னமும், அ.தி.மு.க. கட்சியும், கொடியும் தலைமை தேர்தல் ஆணையத்தால் முடக்கி வைக்கப்பட்டது.

இந்த சச்சரவில் உண்மையான அ.தி.மு.க. தொண்டர்களின் பொதுச்செயலாராக செயல்பட்டு வரும் ஜெ.தீபா சற்று ஓதுங்கி இருந்தார் என்பது நாடறிந்த உண்மையாகும்.தீபா அணி சார்பில் 5.52 லட்சம் பிரமாண பத்திரங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி உள்ளோம்.

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஜெ.தீபாவை தேர்வு செய்திட தேர்தல் ஆணையம் தலையிட்டு அ.தி.மு.க. உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும். சசிகலா தேர்வை ரத்து செய்ய வேண்டும்.சூழ்ச்சியால், வஞ்சகத்தால் இரட்டை இலையை பெறுவதற்கு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். சதிவலையை உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் உடைத்தெறிவார்கள். ஜெ.தீபாவுக்கு எதிரான தடைக்கற்களை தூள் தூளாக்கப்படும்.

ஆன்மா பேசியதாக நாடகமாடியவர்கள் அம்மாவின் மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டுமென்று நீலிக்கண்ணீர் வடித்த ஓ.பி.எஸ்.சு.ம், சசிகலா கூட்டத்தினரிடம் சண்டை போடுவது போல் பாசாங்கு வே‌ஷம் போடும் இ.பி.எஸ்.சையும் தொண்டர்கள் நம்ப மாட்டார்கள்.

இவர்களுடைய பிரமாண பத்திரங்கள் அனைத்தும் போலியானவை என்றும் ஏற்கனவே அதிமுக ஜெ.தீபா அணி சார்பில் புகார் கொடுத்துள்ளோம்.அவர்களது போலி ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் வருகிற 16-ந் தேதி அ.தி.மு.க. ஜெ.தீபா அணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் எடுத்து செல்வதோடு எங்களது உண்மை தன்மையையும் மீண்டும் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்த உள்ளோம்.

இரு அணிகள் இணைப்பு என்பது ஊழல் என்ற குட்டையில் ஊறிய மட்டைகள் என்று ஏற்கனவே ஜெ.தீபா வர்ணித்தார். தற்போது இந்த ஊழல் அணிகளை இயக்கிய மத்திய அரசு என்கிற பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. தொண்டர்கள் யாரிடமும் ஏமாற மாட்டார்கள். தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் ஜெ.தீபாவுக்கு வெற்றி கனியை தரும், தரும் என உறுதியாக நம்புவோம்.

நீதி தவறுமானால் உச்சநீதிமன்றம் வரை சென்று தூரோகிகளுக்கு சின்னத்தையும், கொடியையும், கட்சியையும் கொடுக்க விடமாட்டோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment