பிரான்சில் குடும்ப உறுப்பினர்களை பணியில் அமர்த்த எம்.பி.க்களுக்கு தடை

220 0

பிரான்ஸ் நாட்டின் பாராளுமன்ற எம்.பி.க்கள், மந்திரிகள், தங்களது குடும்ப உறுப்பினர்களை உதவியாளர் பணியில் அமர்த்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி மந்திரிகள் மற்றும் எம்.பி.க்கள் தங்களது பாராளுமன்ற உதவியாளராக மனைவி மற்றும் மகள், மகனை வைத்துக் கொள்ளக் கூடாது. அதை மீறினால் 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும். மேலும் ரூ.40 லட்சம் அபராதமும் வசூலிக்கப்படும்.

அதே நேரத்தில் எம்.பி.க்கள் மற்றும் மந்திரிகள் தங்களது பாராளுமன்ற உதவியாளராக தங்களது காதலரையோ, அல்லது காதலியையோ வைத்துக் கொள்ளலாம்.கடந்த மே மாதம் பிரான்சில் அதிபர் தேர்தல் நடந்தது. அதில் பிரான்கோயிஸ் பில்லான் போட்டியிட்டார். அவர் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர் தனது மனைவி பெனிலோப் மற்றும் குழந்தைகளுக்கு அரசின் பொதுப் பணத்தை எடுத்து ஊதாரித்தனமாக செலவழித்ததாக தேர்தல் பிரசாரத்தின் போது ஊழல் புகார் தெரிவிக்கப்பட்டது.அவர்களை தனது பாராளுமன்ற உதவியாளர்களாக நியமித்து சம்பளம் வழங்கியதாக பில்லான் பதில் அளித்தார். இந்த ஊழல் புகார் காரணமாக அவர் முதல் சுற்றிலேயே தோல்வியை தழுவினார்.இது போன்ற ஊழல் புகார் மற்றும் முறைகேட்டை தடுக்கவே மெக்ரான் இப்புதிய சட்டத்தை கொண்டு வந்ததாக தெரிகிறது.

Leave a comment