பொதுமக்களின் அசௌகரியம் கருதி பணிக்கு திரும்புங்கள் – ஜனாதிபதி கோரிக்கை

240 0

பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரிய நிலமையை கருத்தில் கொண்டு பணிக்கு திரும்புமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெற்றோலிய கூட்டுத்தாபன பணியாளர்களிடமே ஜனாதிபதி இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

 

நேற்று இரவு முதல் பெற்றோலிய விநியோக நடவடிக்கை அத்தியாவசிய சேவையாக்கப்படுவதாக அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டது.

இதனிடையே, பெற்றோவிய விநியோகம் அத்தியாவசியமாக்கப்பட்டுள்ள நிலையில் பெற்றோலிய விநியோகத்தில் ஈடுபடாத தனியார் பௌசர்களின் அனுமதி பத்திரங்கள் ரத்துச் செய்யப்படும் என தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.
கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல எண்ணெய் களஞ்சிய சாலைகளில் விநியோக பணிகள் வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் பௌசர்கள் அங்கு செல்ல வேண்டும் எனவம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் பெற்றோலிய விநியோகம் அத்தியாவசியமாக்கப்பட்டுள்ள நிலையில் பெற்றோலிய கூட்டுத்தாபன பணியாளர்கள் பணிக்கு திரும்பாத பட்சத்தில் அவர்கள் பணியில் இருந்து தானாக இடைவிலகியதாக கருதப்படுவார் எனவும் தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பெற்றோலிய கூட்டுத்தாபன பணியாளர்கள் நேற்று முன்தினம் இருந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment