அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி உருவாகிறது

387 0

அ.தி.மு.க.- பாரதிய ஜனதா கட்சிகளிடையே கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக தெரிவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

காற்றின் திசை அவ்வப்போது மாறுவது போல் அரசியல் காற்றும் மாறி மாறித்தான் வீசும் என்பதுதான் யதார்த்தம்.தமிழகத்தில் ஜெயலலிதாவின் மறைவும், கருணாநிதியின் முதுமையும் மிகப்பெரிய அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதை பயன்படுத்திக் கொள்ள ஒவ்வொரு கட்சியும் ஒரு வியூகத்தை வகுக்கும். அதில் வெற்றி பெற என்னென்ன வழிகள் உண்டோ அத்தனையையும் ஆராயும்.

ஆனால் திடீரென்று திரை நட்சத்திரங்கள் அரசியல் பக்கம் திரும்பியது அரசியலின் போக்கை மாற்றி இருக்கிறது.பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த் திடீரென்று ரசிகர்கள் சந்திப்பு மூலம் அரசியல் பயணத்துக்கான வெள்ளோட்டம் பார்த்தார்.

தமிழ்நாட்டை பொறுத்த வரை தி.மு.க., அ.தி.மு.க. என்ற இருபெரும் கட்சிகளின் ஆதிக்கம்தான் இதுவரை இருந்து வருகிறது.ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தகுதியான தலைமை இல்லாததாலும், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானதாலும் அ.தி.மு.க.வின் எதிர் காலம் கேள்விக்குறியாகி நிற்கிறது.

முதுமையின் காரணமாக கருணாநிதி ஒதுங்கி இருப்பதால் தி.மு.க.வும் தன்னை வலுப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.இப்படிப்பட்ட சூழ்நிலையில் தேசிய கட்சியான பா.ஜனதா தன்னை பலப்படுத்திக் கொள்ள ரஜினிக்கு வலை விரித்தது. ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டதால் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பது பா.ஜனதாவின் எண்ணம்.

ஒரே ஒரு எம்.பி.யை மட்டுமே வைத்துக் கொண்டு ஒற்றைக்காலில் தவம் செய்து கொண்டிருக்கும் பா.ஜனதா நிற்பதற்கே இன்னொரு கால் தேவைப்படுகிறது.ஆனால் பா.ஜனதாவினரிடம் கேட்டால் ‘நாங்கள் பலம் இல்லாமல் இருக்கிறோம் என்று யார் சொன்னது? 133 எம்.எல்.ஏ.க்கள், 50 எம்.பி.க்கள் இருக்கிறார்களே! என்று நமட்டு சிரிப்புடன் சொல்கிறார்கள்.

காரணம், அ.தி.மு.க.வின் மூன்று அணிகளும் மொத்தமாக பா.ஜனதாவை ஆதரிக்கின்றன. ஜனாதிபதி தேர்தலில் ஆதரவாக வாக்களித்தன. துணை ஜனாதிபதி தேர்தலிலும் ஆதரவாக வாக்களிப்போம் என்று தாமாகவே முன் வந்து ஆதரவை தெரிவித்துவிட்டன.எதிர்பாராமல் கிடைத்துள்ள இந்த ஆதரவை எதிர் கால அரசியலுக்கு பயன்படுத்திக்கொள்ள பா.ஜனதா தயாராகி விட்டது.

கழகங்கள் இல்லாத தமிழகம்! ஊழல் இல்லாத நிர்வாகம்! என்ற கோ‌ஷங்களை ஒதுக்கி வைத்து விட்டு கழகம், ஊழல் என்ற முத்திரையை தாங்கி இருந்தாலும் கூட்டு சேர்ந்தால் ஓட்டு நிச்சயம் என்ற நம்பிக்கையில் வரும் காலத்தில் அ.தி.மு.க. கூட்டணி என்ற திசையிலேயே பா.ஜனதா பயணித்து கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில்தான் கமலின் திடீர் பிரவேசம் பா.ஜனதாவை ஆவேசம் அடைய வைத்துள்ளது. திரைத்துறை நிகழ்ச்சியில் இருந்து நிர்வாகத்துறை அனைத்தும் ஊழலில் மிதக்கிறது என்று அவர் கொளுத்திப் போட்டது அரசியலில் பற்றி எரிகிறது.எதிரியை தாக்க ஒருவர் தயாரானதை பார்த்ததும் தி.மு.க.வுக்கு குஷியாகி விட்டது. கமலுக்கு ஆதரவாக களம் இறங்கியது. இது நியாயமும் கூட.

அ.தி.மு.க. அமைச்சர்களும் கடுமையாக விமர்சிக்கிறார்கள். எல்லை மீறிய விமர்சனத்தை கண்டித்தாலும் அவர்கள் ஆத்திரப்படுவதில் அர்த்தம் இருக்கிறது.ஆனால் பா.ஜனதா கமலுக்கு எதிராக களம் இறங்கி இருப்பதுதான் ஆச்சர்யம். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா ஆகியோர் கமல் எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்திருப்பது அரசியலில் அடுத்த கட்ட நகர்வை முன்னெடுத்து இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.கமலும், அ.தி.மு.க.வும் மோதுகிறார்கள். வேடிக்கை பார்க்கலாம். ஏன் அ.தி.மு.க. வுக்காக களம் இறங்க வேண்டும்?

தி.மு.க.வையும், அ.தி.மு.க. வுக்கு ஆதரவாக கமலையும் கடுமையாக எதிர்ப்பதன் மூலம் பா.ஜனதா தனது கூட்டாளியாக அ.தி.மு.க.வை ஏற்றுக் கொண்டதாகவே கருதப்படுகிறது. எனவே வரும் தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜனதா கட்சிகளிடையே கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக தெரிவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

Leave a comment