நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் எடப்பாடி பழனிசாமி – அமைச்சர்கள் செய்திகள் திடீர் புறக்கணிப்பு

21115 0

நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களின் செய்திகள் திடீரென புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனால் அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அ.தி. மு.க அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைகாக சசிகலாவையும், தினகரனையும் கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் அறிவித்தனர். இதனால் சசிகலா அணி இரண்டாக உடைந்தது. தினகரன் ஆதரவாளர்கள் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள்.இதனால் அ.தி.மு.கவில் ஓ.பி.எஸ்.அணி, எடப்பாடி அணி, தினகரன் அணி என 3 அணிகள் இயங்கி வருகின்றன.

இந்த நிலையில் கடந்த மாதம் 3-ந் தேதி திகார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த தினகரன், என்னை யாரும் ஒதுக்கி வைக்க முடியாது என்று கூறியதுடன் மீண்டும் கட்சி பணிகளில் ஈடுபட உள்ளேன் என்றார்.இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார் தினகரனை ஒதுக்கி வைத்தது ஒதுக்கி வைத்ததுதான்.அந்த முடிவில் மாற்றம் இல்லை என்று கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தினகரன் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும் ஆட்சியை பார்த்துக்கொள்ளட்டும், தினகரன் கட்சியை பார்த்துக் கொள்வார் எனறு கூறினர்.

எடப்பாடி பழனிசாமியோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் , ஆட்சியையும், கட்சியையும் வழி நடத்தி வருகிறார். தினகரனை அழைக்காமலேயே அ.தி.மு.க தலைமைகழகத்தில் கூட்டம் நடத்தினார். இப்தார்விருந்து நிகழ்ச்சியையும் நடத்தினார்.மதுரையில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நிகழ்ச்சிக்கும் தினகரன் அழைக்கப்படவில்லை. இப்படி தினகரனை ஒதுக்கி வைத்து விட்டு கட்சியை நடத்த வேண்டும் என்பதில் எடப்பாடி பிடிவாதமாகவே உள்ளார்.

இருப்பினும் அ.தி.மு.க. வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையில் சசிகலா பற்றிய செய்திகளும், எடப்பாடி பழனிசாமி, தினகரன் ஆகியோர் செய்திகள் வெளியாகி வந்தன. எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் படங்களும், அமைச்சர்களின் போட்டோக்களும் தவறாமல் இடம் பெற்று வந்தன.

தினகரன் தனது வீட்டில் ஆதரவாளர்களை சந்தித்து வந்த நிகழ்ச்சிகளும் செய்திகளாக இடம் பிடித்தது.1988-ம் ஆண்டு நமது எம்.ஜி. ஆர். நாளிதழை ஜெயலலிதா தொடங்கியது முதல் அ.தி. மு.க ஆளும் கட்சியாக இருந்த போதெல்லாம் அரசு சார்பில் முதல்- அமைச்சர் வழங்கும் உதவிகள் தவறாமல் இடம் பெற்று வந்துள்ளது.

ஆனால் நேற்று கொடுங்கையூர் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆறுதல் கூறிய செய்திகள் இன்று நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் இடம் பெறவில்லை.

அந்த செய்திகள் திடீரென புறக்கணிக்கப்பட்டுள்ளன. அதேபோல் அமைச்சர்களின் செய்திகளும், படங்களும் புறக்கணிக்கப்பட்டு இருந்தது.இது நாள் வரையில் அ.தி.மு.க வில் நடந்த உள்கட்சி விவகாரமும் சண்டையும், நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் வெளிப்படாமலேயே இருந்தது. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி, சத்தமே இல்லாமல் சசிகலா எதிர்ப்பை காட்டி வந்தார்.

ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் எடப்பாடி பழனிச்சாமியின் செய்திகள் இடம் பெற்று வந்தன.இந்த நிலையில் அ.தி.மு.க. வில் நடக்கும் இந்த மோதல், கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான நமது எம்.ஜி.ஆரிலும் வெட்ட வெளிச்சமாக வெடித்து கிளம்பி உள்ளது. இதன் எதிரொலியாகவே எடப்பாடி பழனிசாமியின் செய்திகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் “ சசிகலாவின் ஆணைப்படி எம்.பி. எம்.எல். ஏ.க்கள் பா.ஜனதா வேட்பாளருக்கு வாக்களிக்கிறார்கள்” என்கிற செய்தி தலைப்பு செய்தியாக வந்துள்ளது.“சிறையில் சசிகலா விதிகளை மீறவில்லை” என்கிற செய்திகளும் பிரதானமாக இடம் பெற்றுள்ளன.

ஆனால் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும், தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய செய்தி வெளியிடப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் சசிகலா குடும்பத்தினராலேயே நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியின் செய்திகள் சசிகலா அறிவுறுத்தலின் படியே புறக்கணிக்கப்பட்டிருக்கலாம் என்கிற கருத்தே பரவலாக உள்ளது.

Leave a comment