பயங்கரவாதத்துக்குள் நாட்டை மீண்டும் உட்படுத்துவதற்கு எந்த வகையிலும் இடமளிக்கப் போவதில்லை-பொலிஸ் மா அதிபர்

247 0

பயங்கரவாதத்துக்குள் நாட்டை மீண்டும் உட்படுத்துவதற்கு எந்த வகையிலும் இடமளிக்கப் போவதில்லையென, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். 

இதேவேளை, வடக்கில் கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்கள், பயங்கரவாதச் செயற்பாடுகள் அல்ல என்றும் அவர் கூறினார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பிராந்திய ஒலிபரப்புகளில் ஒன்றான, ரஜரட்​ட ஒலிபரப்புச் சேவையில் நடத்தப்படும் ‘பொலிஸாரும் நீங்களும்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயல்வோர் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக, பொதுமக்களின் நலன் கருதி மேற்கொள்ளக்கூடிய அனைத்து உடனடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அதில் நாம் உறுதியாகவே நிற்கின்றோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“நாட்டில், தற்பொழுது நிலவும் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்கு அரசியல் கட்சிகள் சிலவும் அமைப்புகள் சிலவும் முயல்கின்றன. இவ்வாறான குறுகிய நோக்கங்கள் கொண்ட செயற்பாடு காரணமாக, நாட்டை மீண்டும் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்குள் உட்படுத்துவதற்கு எந்த வகையிலும் இடமளிக்கப்போவதில்லை. அதேபோல, வடக்கில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு இடமில்லை” என்றும், அவர் குறிப்பிட்டார்.

“இதேவேளை, ஒவ்வொரு ஐந்து மணித்தியாலங்களுக்கும் ஒருமுறை, நாட்டின் பாதுகாப்புத் தொடர்பான புலனாய்வுப் பிரிவின் தகவல்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகளும் தற்போது ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன” என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

Leave a comment