சமாஜ்வாடி கட்சி இருபிரிவானது: ஜனாதிபதி தேர்தலில் மீரா குமாருக்கு அகிலேஷ் யாதவ் திடீர் ஆதரவு

2095 0

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளநிலையில் சமாஜ்வாடி கட்சி இரு பிளவுகளாக பிரிந்துள்ளது. உ.பி. முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் மீரா குமாருக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதில் ஆளும் பா.ஜனதா சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகள் சார்பில் மீரா குமாரும் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

இந்த தேர்தலில் பாராளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்), அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 4,896 பேர் வாக்களிக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
இந்நிலையில், சமாஜ்வாடி கட்சி இருபிளவுகளாக பிரிந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த சமாஜ்வாடி பெரும் பின்னடைவை சந்தித்தது. சமாஜ்வாடியில் முலாயம் சிங் – அகிலேஷ் யாதவ் இடையிலான மோதல் முற்றியதே அக்கட்சியின் படுதோல்விக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டது.

மாநில சட்டசபையில் அக்கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையானது வெறும் 47 ஆக குறைந்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளநிலையில் கட்சியில் மீண்டும் பிரிவு தென்பட்டுள்ளது. சமாஜ்வாடி கட்சியில் தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ள இந்த பிரிவினால் ஜனாதிபதி தேர்தல் முடிவில் எந்தஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும், குடும்பத்தில் ஏற்கனவே உள்ள பிரச்சனையானது மேலும் அதிகரிக்கும் எனவும் சமாஜ்வாடி கட்சிக்குள் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கோவிந்தை பா.ஜனதா அறிவித்ததும் அவர் மிகவும் வலுவானவர் என்றார் முலாயம் சிங். மேலும், ஜூன் 20-ம் தேதி யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடியை கவுரவிக்கும் வகையில் நடத்திய நிகழ்ச்சியிலும் முலாயம் சிங் கலந்து கொண்டார். இதுவே அவர் கோவிந்தை ஆதரிக்கிறார் என்பதை காட்டியது.ஆனால், இந்த நிகழ்ச்சியில் மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இவர்கள் இருவரும் எதிர்க்கட்சிகள் தரப்பில் நிறுத்தப்பட்டு உள்ள மீரா குமாரை ஆதரிக்கிறார்கள்.

இதற்கிடையில், கடந்த வெள்ளியன்று சமாஜ்வாடி தலைமை அலுவலகத்தில் அகிலேஷ் யாதவை மீரா குமார் சந்தித்து பேசினார். மாயாவதியும் சந்தித்து பேசி ஆதரவு கோரினார். தற்போது, அனைத்து எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மீரா குமாருக்கு வாக்களிக்க வேண்டும் என அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார். மற்றொரு சமாஜ்வாடி தலைவரும், கட்சியின் சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான ராம் கோவிந்த் சவுதாரி, எல்லோரும் மீரா குமாருக்கு ஆதரவு அளிப்பார்கள் என்றார். சமாஜ்வாடி கட்சிக்கு பாராளுமன்ற மக்களவையில் 5 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 19 உறுப்பினர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment