பாகிஸ்தானில் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அவரது பாதுகாப்புக்காக சென்ற போலீஸ்காரர்கள் 3 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவெட்டாவில் போலீஸ் சூப்பிரண்டாக இருந்து வந்தவர் முபராக் ஷா (வயது 58). இவர் நேற்று காலை தனது வீட்டில் இருந்து போலீஸ் வாகனத்தில் அலுவலகத்துக்கு சென்றுகொண்டிருந்தார். அவரது பாதுகாப்புக்காக 3 போலீஸ்காரர்கள் உடன் சென்றனர்.
அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த பயங்கரவாதிகள் 4 பேர் முபராக் ஷா சென்ற வாகனத்தை குறிவைத்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி விட்டனர். இதில் முபராக் ஷா மற்றும் அவரது பாதுகாப்புக்காக சென்ற போலீஸ்காரர்கள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலீபான் பயங்கரவாதிகள் பொறுப்பேற்று உள்ளனர். அதே போல் ஐ.எஸ். பயங்கரவாதிகளும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்ளனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் நவாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

