மும்பையில் ஒரே பாதையில் நேருக்கு நேர் வேகமாக வந்ததா 2 மோனோ ரெயில்கள்?

310 0

மும்பையில் ஒரே பாதையில் இரண்டு மோனோ ரெயில்கள் நேருக்கு நேர் வேகமாக வருவதுபோல் வெளியான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

பரபரப்பாக இயங்கும் மும்பை நகரில், மின்சார துண்டிப்பு காரணமாக மோனோ ரெயில் ஒன்று செம்பூர் நிலையத்தை நெருங்கும் போது திடீரென நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து, நிறுத்தப்பட்ட ரெயிலை மீட்பதற்காக உடனடியாக அதிகாரிகள் வாடாலா டிப்போவில் இருந்து மற்றொரு ரெயிலை வர வழைத்தனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டு நிறுத்தப்பட்ட ரெயிலோடு புதிதாக வரவழைக்கப்பட்ட ரெயில் இணைக்கப்பட்டு, பிளாட்பாரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டது.

இதற்கு இடையில், மின்சார துண்டிப்பால் நிறுத்தப்பட்ட ரெயிலில் இருந்த பயணிகள் பத்திரமாக அருகில் இருந்த பிளாட்பார்மிற்கு இறங்கி சென்று விட்டனர்.

இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக காயம் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும், இந்த பிரச்சனையால் மும்பை நகரின் பல்வேறு இடங்களில் மோனோ ரெயில் சேவை நேற்று மாலை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனிடையே, இரண்டு ரெயில்கள் நேருக்கு நேர் மோதுவது போன்ற காட்சிகள் இணையதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வந்தது. இந்த செய்திக்கு மும்பை மாநகர மெட்ரோ அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.

இரண்டு மோனோ ரெயில்கள் நேருக்கு நேர் சென்று விபத்துக்குள்ளாக இருந்ததாக வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என்று அவர்கள் திட்டவட்டமாக கூறினார்.

Leave a comment