எடப்பாடி ‘கை’ ஓங்கியதால் தினகரன்-ஓ.பி.எஸ். அணிகள் கரைகிறது

406 0

அனைத்து முக்கிய முடிவுகளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியே தன்னிச்சையாக எடுத்து வருவதால் அதிமுக கட்சியிலும் அரசிலும் அவரது கை ஓங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க.வில் நேரடியாக ஆதிக்கம் செலுத்திய சசிகலா ஆட்சி கட்டிலிலும் அமர நினைத்தார்.

இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தனி அணியை உருவாக்கினார். அவரது பின்னால் 11 எம்.எல்.ஏ.க்களும் சேர்ந்தனர். இதனால் உஷாரான சசிகலா மற்ற எம்.எல்.ஏ.க்களை தக்க வைத்து எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக்கினார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற அவர் தனது உறவினரான டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளராக்கினார்.

இதற்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் வரவேற்பு தெரிவித்தனர். இதனால் தினகரன், சசிகலா இடத்தில் இருந்து கட்சி பணிகளை மேற்கொண்டார். ஆனால் இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அவர் திடீரென கைது செய்யப்பட்டது திருப்பதை ஏற்படுத்தியது. இதன் பின்னர் ஓ.பி.எஸ். அணியை தங்களுடன் இணைப்பதற்கு எடப்பாடி பழனிசாமியும் அமைச்சர்களும் முயற்சி செய்தனர்.

இதற்காக சசிகலாவையும், தினகரனையும் கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் அறிவித்தனர். இது தினகரன் ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது. இந்த நிலையில் திகார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த தினகரன் மீண்டும் கட்சி பணியில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். ஆனால் அமைச்சர்களோ இதனை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். இதனால் சசிகலா அணி 2 ஆக உடைந்தது. தினகரன் ஆதரவாளர்கள் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆட்சியை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். கட்சியை தினகரன் வழி நடத்தட்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ தினகரனை ஒதுக்கி வைத்து விட்டு கட்சி பணிகளிலும் கவனம் செலுத்த தொடங்கினார்.

கட்சி சார்பில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, மதுரையில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஆகியவற்றுக்கு தினகரனை அழைக்காமலேயே நடத்திக் காட்டினார்.

இந்த விழாக்களுக்கு தினகரனை கண்டிப்பாக அழைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் குரலை எடப்பாடி முற்றிலுமாக நிராகரித்தார். இதனால் வேறு வழியின்றி தற்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க் கள் எடப்பாடியுடன் சரண் அடைந்தனர்.

மதுரையில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் எடப்பாடி பழனி சாமியுடன் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான தங்க தமிழ்ச்செல்வன், போஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் எடப்பாடி அணியினரிடம் சென்னை வந்து ஆதரவு திரட்டினார். இந்த நிகழ்ச்சியில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட 120 எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர். இந்த விழாவுக்கும் தினகரன் அழைக்கப்படவில்லை.

இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தினகரனை முற்றிலுமாக ஒதுக்கி வைத்திருப்பது உறுதியானது. அதே நேரத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும், எடப்பாடி சத்தமில்லாமல் தன்வசப்படுத்தி இருப்பது தெளிவாகி உள்ளது.

இதன் காரணமாக தினகரன் அணிகரையும் சூழல் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி, சசிகலா, தினகரன் விவகாரம் பற்றி வாய் திறந்து பேச வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி பார்த்தனர். ஆனால் அவரோ அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்க வில்லை. பேசாமல் அமைதியாக இருந்து அதனை செயலில் காட்டிவிட்டார்.

தனி அணியாக பிரிந்து சென்று சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியபோது பரபரப்பாக பேசப்பட்ட ஓ.பி.எஸ். மாவட்டந்தோறும் கூட்டம் நடத்தி வருகிறார். ஆனால் அந்த அணியின் வேகம் குறைந்தே காணப்படுகிறது. இதனால் அவரது பக்கம் இணைந்த எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் குழப்பத்தில் உள்ளனர்.

அதே நேரத்தில் சிறையில் இருந்து வெளியில் வந்ததும் ஆதரவாளர்களுடன் ஆலோசனை, அதிரடி பேட்டி என ஆரவாரப்படுத்திய தினகரன் அடங்கியே உள்ளார். இது போன்ற வி‌ஷயங்கள் எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு சாதகமாகவே மாறி இருக்கிறது.

Leave a comment