சவுதி அரேபியா: கடற்கரையில் விளையாடியபோது திடீர் மாரடைப்பு – இந்திய சிறுமி உயிரிழந்தார்

236 0

சவுதி அரேபியா நாட்டில் உள்ள பிரபல கடற்கரையில் விளையாடிய இந்திய சிறுமி திடீரென்று மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம், ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பர்வேஸ் அலி கான். வளைகுடா நாடுகளில் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றிவரும் இவர் தனது மனைவி, பிள்ளைகளுடன் தற்போது சவுதி அரேபியாவின் கிழக்கு பகுதியான தம்மாம் என்ற நகரத்தில் வாழ்ந்து வருகிறார். இவரது மகள் சாஹெர் பர்வேஸ்(15) தம்மாம் நகரில் உள்ள இந்தியப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையையடுத்து, அல்-கோபார் பகுதியில் உள்ள ஹால்ஃப் மூன் கடற்கரை பகுதிக்கு இவர் தனது குடும்பத்தாருடன் சுற்றுலா சென்றார். கடல் நீரில் குதூகலமாக ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த சிறுமி சாஹெர் பர்வேஸ், சற்று நேரத்துக்கு பின்னர் சோர்வாகவும், படபடப்பாகவும் வந்து தனது தாயின் மடியில் சாய்ந்தார்.

அவளது நிலமை பற்றி அறியவந்த கடலோர பாதுகாப்பு துறையினர் சாஹெர் பர்வேசை அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சிறுமியின் உயிர் பிரிந்து விட்டதாக தெரிவித்தனர்.

அவரது மரண செய்தி தொடர்பான தகவல்கள் வெளியானதும், கடலில் இருந்த பாம்பு கடித்ததால் சாஹெர் பர்வேஸ் உயிரிழந்ததாக வளைகுடா நாடுகளில் வசிப்பவர்கள் சமூக வலைத்தளங்களின் மூலமாக வதந்தியை பரப்பி விட்டனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். மாரடைப்பால் தான் சிறுமி சாஹெர் பர்வேஸ் மரணம் அடைந்தார் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குதூகலமாக விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென்று வந்த மாரடைப்பால உயிரிழந்த தகவல் வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a comment