தென்னை நார் உற்பத்தியாளர்கள்: ரூ.2000 கோடி அன்னியச் செலாவணி இழக்கும் அபாயம்

23014 0

தென்னை விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்களை காக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி எடுக்காவிட்டால், தென்னை விவசாயம் அழிவதோடு, தென்னைநார் பொருட்கள் ஏற்றுமதியால் கிடைத்துவரும் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் அன்னியச் செலாவணி இழக்க நேரிடும் என விவசாயிகள் மற்றும் தென்னைநார் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் குறிப்பாக பாலக்காடு கணவாய் வழியாக நெகமம் பகுதிக்கு கிடைத்து வந்த தென்மேற்கு பருவமழை முற்றிலும் கிடைக்கவில்லை.

இப்பகுதியில் நிலவும் கடும் வறட்சியால் நிலத்தடி நீர்மட்டம் 1000 அடிக்கு கீழே சென்றதால் கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் முற்றிலும் வற்றிவிட்டன. வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை வெட்டி அகற்றும் கூலியைக் கூட கொடுக்க முடியாமல், மரங்களுக்கு தீ வைத்து கொளுத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி அதன் சுற்றுப் பகுதிகளில் 2 லட்சம் ஏக்கருக்கும் மேல் தென்னை பயிரிடப்பட்டு உள்ளது. தென்னை மட்டைகளை மூலப்பொருளாக பயன்படுத்தி, பொள்ளாச்சியை சுற்றி 200-க்கும் மேற்பட்ட தென்னை நார் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழிற்கூடங்கள் இயங்கி வருகின்றன.

தென்னை நார், நார் கட்டிகள் மற்றும் மிதியடிகள் கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 1000 எண்ணிக்கை கொண்ட தென்னை மட்டைகள் ஆயிரம் ரூபாய்க்கு கிடைத்தன. தேங்காய் விளைச்சல் குறைந்ததால், தற்போது ரூ.1400 ஆக விலை உயர்ந்து விட்டது. தென்னை மட்டையின் உற்பத்தி குறைவு மற்றும் விலை உயர்வை பயன்படுத்தி செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி உள்ளனர். இதனால் தென்னை நார் உற்பத்தியாளர்கள் பட்டுக்கோட்டை, மலப்புழா, மைசூரு பகுதிகளில் இருந்து தென்னை மட்டைகளை தருவித்து வருகின்றனர்.

இது குறித்து தென்னை நார் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.கே.கெளதமன் கூறியதாவது: இந்த தொழிலுக்கு முக்கிய மூலப்பொருளான தென்னை மட்டைகளை தண்ணீரில் ஊற வைத்து இயந்திரத்தில் செலுத்தி தென்னை நார் உற்பத்தி செய்யப்படுகிறது. நடுத்தரமான ஒரு தென்னை நார் தொழிற்சாலைக்கு நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. தற்போது நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் தொழிற்சாலைக்கு தேவையான தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

மூலப்பொருட்கள் விலையேற்றம், உற்பத்தி செலவு உயர்வு, சர்வதேச அளவில் நிலவும் போட்டி ஆகியவற்றால் இந்திய தென்னை நார் உற்பத்தியாளர் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். இதை பயன்படுத்தி இலங்கை சர்வதேச பையர்களை’ தன் பக்கம் சாய்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும். தொழிற்சாலையில் பயன்படுத்திய தண்ணீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் கட்டமைப்பை அமைக்க அரசு மானியம் வழங்க வேண்டும் என்றார்.

மூலப்பொருட்கள் விலையேற்றம், உற்பத்தி செலவு உயர்வு, சர்வதேச அளவில் நிலவும் போட்டி ஆகியவற்றால் இந்திய தென்னை நார் உற்பத்தியாளர் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். இதை பயன்படுத்தி இலங்கை சர்வதேச பையர்களை’ தன் பக்கம் சாய்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும். தொழிற்சாலையில் பயன்படுத்திய தண்ணீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் கட்டமைப்பை அமைக்க அரசு மானியம் வழங்க வேண்டும் என்றார்.

Leave a comment