நீட் தேர்வு குழப்பத்தால் என்ஜினீயரிங் கவுன்சிலிங் 2 நாட்கள் தாமதம்

7165 0

நீட் தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டால் என்ஜினீயரிங் கவுன்சிலிங்கை ஜூன் 29, 30-ந்தேதி தொடங்குவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக அதிகாரி கூறினார்.

என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு வகுப்புகளை ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் என்ஜினீயரிங் கவுன்சிலிங்கை அண்ணா பல்கலைக்கழகம் ஜூன் 27-ந்தேதி தொடங்கி ஜூலை 31-ந்தேதிக்கு முன்னதாக முடிப்பது வழக்கம்.

மேலும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களில் பெரும் பகுதியினர் மருத்துவ படிப்புக்கு சென்று விடுவார்கள் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் எம்.பி.பி.எஸ். கவுன்சிலிங் தொடங்கிய ஓரிரு நாட்களுக்குப் பின்னரே என்ஜினீயரிங் கவுன்சிலிங் தொடங்கப்படும்.

அதே போல இந்த ஆண்டும் என்ஜினீயரிங் கவுன்சிலிங் வருகிற 27-ந்தேதி தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தகுதி தேர்வு முடிவு வெளியாவது தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வு தொடர்பான வழக்கில் தேர்வு முடிவை வெளியிட சி.பி.எஸ்.இ.க்கு சுப்ரீம் கோர்ட்டு 26-ந்தேதிக்குள் தேர்வு முடிவை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. கோர்ட்டு உத்தரவிட்டு 7 நாட்களுக்கு மேல் ஆகியும் இதுவரை ‘நீட்’ தேர்வு முடிவு வெளியிடப்படவில்லை.

இதன் காரணமாக எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை தொடங்குவது தள்ளிப்போகும் என்பதால் என்ஜினீயரிங் கவுன்சிலிங் தொடங்குவதும் தள்ளிப்போகும் நிலை உருவாகி இருக்கிறது.

இது தொடர்பாக உயர் கல்வித்துறை செயலாளர் தலைமையில் அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்கள். இதில் கவுன்சிலிங் தொடங்குவதை ஓரிரு நாட்களுக்கு தள்ளி வைப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

இதுபற்றி அண்ணா பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், “நீட் தேர்வு முடிவு ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கிறோம். அது தாமதம் ஏற்பட்டால் என்ஜினீயரிங் கவுன்சிலிங்கை ஜூன் 29, அல்லது ஜூன் 30-ந்தேதி தொடங்குவது என ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

Leave a comment