அ.தி.மு.க. ஆட்சிக்கு என்னால் எந்த இடையூறும் ஏற்படாது

1245 0

அ.தி.மு.க. ஆட்சிக்கு என்னால் எந்த இடையூறும் ஏற்படாது என முன்னாள் அமைச்சரும் பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாச்சலம் கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் பெருந்துறையில் நடந்தது. கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும் பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாச்சலம் தலைமை தாங்கி பேசினார்.மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அடிப்படை தொண்டனாக இருந்த என்னை படிப்படியாக மாவட்ட செயலாளராக உயர்த்தினார்.

2012-ம் ஆண்டு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா என்னை அமைச்சராக நியமித்தார். நான் பெருந்துறையின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என கருதி அம்மா எனக்கு இந்த பதவியை வழங்கினார். பெருந்துறை வளர்ச்சிக்காக நான் குடிநீர் திட்டம், புதிய பஞ்சாயத்து யூனியன் அலுவலகம், புதிய நீதிமன்ற கட்டிடம், டி.எஸ்.பி. அலுவலகம் கொண்டு வந்துள்ளேன். 3 குளங்களை தூர் வாரி சிறுவர் பூங்கா அமைத்துள்ளேன். இதுபோன்ற பல்வேறு திட்டங்களை ரூ.500 கோடி மதிப்பில் நிறைவேற்றி உள்ளேன்.

புதிய குடிநீர் திட்டம் போதுமானதாக இல்லை. இதற்காக கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம் 2014-ம் ஆண்டு 110 விதியின் கீழ் சட்டசபையில் அம்மா அறிவித்தார். இதில் 8 பேரூராட்சிக்கும் 72 கிராம பஞ்சாயத்துக்கள் பயன்பெறும் வகையில் ரூ.128 கோடி செலவில் போர்க்கால அடிப்படையில் அமைக்க ஜெயலலிதா உத்தரவிட்டார்.

ஜெயலலிதா இப்போது இருந்திருந்தால் இந்த திட்டம் ஓராண்டுக்குள் நிறைவேறி இருக்கும். ஆனால் இதுவரை நிறைவேறவில்லை.நாங்கள் கூவத்தூரில் தங்கி இருந்தபோது சின்னம்மா (சசிகலா) முதல்வராக வேண்டும் என அனைத்து எம்.எல்.ஏ.க் களும் முடிவு செய்தோம். அவர் சிறை சென்ற காரணத்தினால் எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்தோம். ஓ.பன்னீர்செல்வம் என்னை தொடர்பு கொண்டு அவருடன் சேர அழைத்தார்.ஓ.பி.எஸ். அணியில் வெறும் 12 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் உள்ளனர். நான் ஒருவன் சேர்ந்திருந்தால் அது 13 ஆகத்தான் உயர்ந்திருக்கும். அவரால் நிச்சயம் ஆட்சி அமைக்க முடியாது. அந்த சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியும் கவிழ்ந்து விடும். ஓ.பி.எஸ்.சும் ஆட்சி அமைக்க முடியாது. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தோம்.

கூவத்தூரில் இருந்த போது தங்கமணி, வேலுமணி இருவரும் எடப்பாடி பழனிசாமியிடம் என்னை அழைத்து சென்றனர். அப்போது எடப்பாடி பழனிசாமி பதவியேற்பு விழா முடிந்த பிறகு உங்களுக்கு (எனக்கு) மாவட்ட செயலாளர் பதவி தருவதாக கூறினார்.

அதற்கு நான் ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயே அமைச்சராகவும் மாவட்ட செயலாளராகவும் இருந்துள்ளேன். எனக்கு இதுவெல்லாம் தேவையில்லை. எனது தொகுதியின் வளர்ச்சிக்கு 3 திட்டங்களை நிறைவேற்றி தர வேண்டும் என்றேன். கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம், பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை, நான்கு வழி புறவழிச்சாலையில் மேம்பாலங்கள் வேண்டும் என்றேன். இதற்கு எடப்பாடி பழனிசாமி சரி என்றார்.

இப்போது ஆட்சி அஸ்திவாரமாக இருப்பது ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்தான். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஈரோட்டுக்கு வந்து ரூ.720 கோடியில் திட்டங்களை அறிவித்தார். அதற்கு முந்தைய நாள் திட்ட அறிக்கையில் பெருந்துறை தொகுதிக்கு ஒரு திட்டங்கள் கூட இல்லை. அவர் சம்மதம் தெரிவித்த கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டமும் இல்லை. இவை இருந்திருந்தால் நான் முதல் ஆளாக விழாவில் கலந்திருப்பேன். பெருந்துறை தொகுதியை புறக்கணித்ததால் நான் மிகுந்த மனவேதனையுடன் விழாவில் கலந்து கொள்ளவில்லை. என்னால் இந்த ஆட்சிக்கு எந்த நெருக்கடியோ… இடையூறோ வராது. முதல்-அமைச்சரிடம் நான் தக்க மரியாதை வைத்துள்ளேன். தடங்கல் எங்குள்ளது…? என்று எனக்கு தெரியவில்லை. முதல்வர் எனது கோரிக்கையை நிறைவேற்ற தயாராக இருந்தாலும் இதை தடுப்பது யார்? என்று தெரியவில்லை.

ஈரோடு மாவட்டத்தில உள்ள அமைச்சர்கள் (கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன்) எல்லா தொகுதிகளையும் சரிசமமாக பார்க்க வேண்டும். பாரபட்சமாக செயல்படக் கூடாது.

தேர்தலின்போது உள் கட்சி சண்டையாலேயே வாக்கு சதவீதத்தை இழந்து இருக்கிறோம். நமது கட்சியை சார்ந்தவர்களே நமது வேட்பாளர்களை தோற்கடித்து உள்ளனர். இது உள்கட்சி காரணம்தான் என்று ஜெயலலிதா கூறி இருந்தார். கடந்த ஓராண்டில் பெருந்துறை தொகுதிக்கு ஒரு புதிய திட்டம் கூட அறிவிக்கவில்லை.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அமைச்சர்கள் நான் கேட்ட 3 திட்டங்களை நிறைவேற்றினால்தான் பெருந்துறை தொகுதி மக்கள் ஆட்சியை ஏற்றுக் கொள்வார்கள். இதனை நிறைவேற்றாவிட்டால் தேர்தலின்போது பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றாவிட்டால் ஈரோடு மாவட்டத்தின் மேற்கு பகுதி பாலைவனமாக மாறிவிடும்.இதேபோல் மணல் பிரச்சனைக்கு முதல்வர் தீர்வு காண வேண்டும். ஊத்துக்குளி வெண்ணைக்கு ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும். அம்மா ஆன்மா சாந்தி அடைய வேண்டுமானால் அம்மா அறிவித்த திட்டங்களை இந்த அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். பெருந்துறை பகுதியில் இந்த திட்டங்களை நிறைவேறாததால் சிலர் போராட்டம் செய்ய முடிவு செய்தனர். நான் அவர்களை தடுத்து அம்மா ஆட்சி உங்களுக்கு நிச்சயம் நல்லது செய்யும் என கூறி உள்ளேன்.இவ்வாறு முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ கூறினார்.

Leave a comment