குப்பையால் தர்க்க நிலையான மாவட்ட அபிவிருத்தி இணை குழு கூட்டம்

370 0

ஹட்டன் நகரின் குப்பை பிரச்சினையால் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டத்தில் வாக்குவாதம் முற்றி குப்பை பிரச்சினை தொடர்பாக காரசாரமான விவாதம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ.தொ.கா மாகாண சபை உறுப்பினர்களான ஏ.பி.சக்திவேல், பிலிப்குமார், கணபதி கனகராஜ் ஆகிய மூவரும் கூட்டம் நடைபெறும் முறை தவறானது எனக் கூறி வெளிநடப்பு செய்தனர்.

மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் குறித்த விடயம் தொடர்பாக சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டம் இன்று (19) நுவரெலியா மாவட்ட செயலகத்தின் ஆச்சர்ய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அமைச்சர் பழனி திகாம்பரம், கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்களான முத்து சிவலிங்கம், கே.கே.பியதாச, மத்திய மாகாண சபை அமைச்சர் மருதுபாண்டி ராமேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

ஹட்டன் நகரில் குப்பை அகற்றுவது தொடர்பான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் விசேட கூட்டம் ஒன்றை எதிர்வரும் 23.06.2017 அன்று ஹட்டன் டிக்கோயா நகர சபை மண்டபத்தில் கூட்டுவது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற அனைத்து அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், மாகாண முதலமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த கூட்டத்தில் குப்பை அகற்றுவது தொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் இந்த குப்பை பிரச்சினையை ஒரு அரசியல் பிரச்சினையாக பார்க்காது.

பொது மக்களின் பொது பிரச்சினையாக பார்க்க வேண்டும். எனவே இது தொடர்பாக ஒருவருக்கு ஒருவர் கயிறு இழுப்பு நடவடிக்கையில் ஈடுபடாமல் ஒற்றுமையாக இதற்கான தீர்வை காண முனவர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவதாக ஏகமனதாக தீர்மானித்தனர். இந்த காணியை பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

அதற்கான இடத்தை தெரிவு செய்ய வேண்டும்.அதனை 23.06.2017 அன்று நடைபெறுகின்ற கூட்டத்தில் தீர்மானிப்பது பொருத்தமாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

இதற்கு கடந்த காலங்களில் எந்தவிதமான ஒரு தீர்வையும் ஹட்டன் நகர சபை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை அனைவரும் முன்வைத்தனர்.

அதற்கு பதிலளித்த ஹட்டன் நகர சபை செயலாளர் குறித்த இடத்தில் குப்பை கொட்டுவதற்கு நீதிமன்ற தடை இருப்பதாகவும் அதன் காரணமாகவே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் செயலாளர் தெரிவித்தார்.

இதன்போது இணைத் தலைவர்களின் ஒருவரான நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாச ஹட்டன் குப்பைகளை அகற்றுவதற்கு தற்காலிக தீர்வு ஒன்றை மேற்கொண்ட முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

பத்தனையில் குப்பை கொட்டப்படும்

ஹட்டன் நகரில் நாள்தோறும் சேருகின்ற குப்பைகளை தற்காலிகமாக பத்தனை ரிக்காட்டன் பகுதிகளில் கொட்டுவதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அன்றாடம் குப்பைகளை வேறுபடுத்தி நகரசபை பொறுப்பேற்பது எனவும் அதனை வேறுபடுத்தி பெற்றுக் கொள்வது தொடர்பில் பொது மக்களை அறிவுறுத்துவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ளுமாறும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

நுவரெலியா தபாற் கந்தோர்

நுவரெலியா தபாற் கந்தோரை தனியாருக்கு கையளிப்பது தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஏகமனதாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த திட்டத்தை எந்த காரணம் கொண்டும் நடைமுறைபடுத்த இடமளிக்க முடியாது என கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டம் நடைமுறைபடுத்தப்படுமானால் தான் வீதியில் இறங்கி போராடவும் தயங்க மாட்டேன் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக நுவரெலியா தபாற் கந்தோரை தனியார் நிறுவனம் ஒன்றிற்கு கையளிப்பது தொடர்பாகவும் அதில் உல்லாச விடுதி ஒன்றை அமைப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை இடம்பெற்றுவருவதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையிலேயே இந்த ஏகமனதான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் இந்த விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறியதை தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்

இந்த கூட்டத்தில் கருத்து தெரிவித்த மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் குறித்த ஒரு பாடசாலையில் விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர் ஒருவரை கட்டாயத்தின் பேரில் இடமாற்றம் செய்து அவரை வேறு ஒரு பாடசாலைக்கு சென்று கணிதம் கற்பிக்குமாறு நுவரெலியா வலய கல்விப் பணிப்பாளர் நடவடிக்கை எடுத்திருப்பது தொடர்பாக கவனத்திற்கு கொண்டு வந்தார்.

குறித்த ஆசிரியை இந்த செயற்பாடு காரணமாக தான் ஆசிரியர் தொழிலைவிட்டு விலகிச் செல்லவும் தீர்மானித்திருப்பதாகவும் அவர் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இதற்கு பதில் அளித்த மத்திய மாகாண சபையின் பிரதான அமைச்சரின் செயலாளர் விஜேரத்தின

குறித்த ஆசிரியருக்கு குறித்த கணித பாடத்தை கற்பிக்க முடியாவிட்டால் அவர் தொடர்பாக நாங்களும் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும்.

எனவே அவர் விரும்பினால் அந்த தொழிலை விட்டுவிட்டு விலகிச் செல்லலாம் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

தொழிலுக்காக பலர் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர் சென்றால் வேறு ஒரு ஆசிரியரை என்னால் அந்த இடத்திற்கு வழங்க முடியும் என அவர் தனது கருத்தை தெரிவித்தார்.

இதன்போது சபையில் இருந்த மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் பிரத்தியேக செயலாளர் எரன்தன ஏமவர்தன மத்திய மாகாண சபையின் பிரதான அமைச்சரின் செயலாளர் விஜேரத்தினவின் கருத்தை தான் வன்மையாக கண்டிப்பதாகவும்.

ஆசிரியர்கள் என்பவர்கள் மிகவும் சிரமத்திற்கு மத்தியிலேயே நுவரெலியா மாவட்டத்தில் தொழில் புரிகின்றார்கள். எனவே அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும்.

எனவே அவர் கூறிய அந்த வார்த்தைகளை அவர் வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். ஆனால் செயலாளர் அது தொடர்பாக எதுவிதமான கருத்துக்களையும் கூறவில்லை.

குறித்த கூட்டத்தில் இணைத் தலைவர்களான மத்திய மாகாண சபையின் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமானும் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment