வடமாகாண முதல்வருக்கு ஆதரவாக 15 உறுப்பினர்கள்

310 0

வடமாகாண அமைச்சர்களான சத்தியலிங்கம் மற்றும் பா.டெனீஸ்வரன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் பிரத்தியேக விசாரணை நடத்தும் பொருட்டு, விசாரணைக் காலம் நிறைவடையும் வரையில் அவர்களை விடுமுறையில் இருக்க வடக்கு முதல்வர் வலியுறுத்தியமையே, இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பிரதான காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.

இந்த விடயம் குறித்து முதலமைச்சரினால், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அறிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை இலங்கை தமிழரசு கட்சி நேற்று முன்வைத்திருந்தது.

எவ்வாறாயினும் குறித்த இரண்டு மாகாண அமைச்சர்களும், விசாரணைகளில் தலையீடு செய்யமாட்டார்கள் என்ற உறுதிப்பாடு வழங்கப்படும் பட்சத்தில், தாம் விடுத்த கட்டாய விடுமுறைக்கான உத்தரவை மீள்பரிசீலனை செய்ய முடியும் என்று சீ.வி.விக்னேஸ்வரன் நேற்று தெரிவித்திருந்தார்.

அதேநேரம், குறித்த விசாரணை தொடர்பில் முதலமைச்சரிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும் பட்சத்தில், நம்பிக்கையில்லா பிரேரணையை மீளப்பெற முடியும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கூறியுள்ளார்.

இது தொடர்பில் தாமும், மன்னார் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனும், கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோருடன் நேற்றையதினம் 3 மணித்தியாலங்கள் வரையில் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வடமாகாணம் தழுவிய நிர்வாக முடகல் போராட்டம் ஒன்றை தமிழ் மக்கள் பேரவை ஒழுங்கு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment