எடப்பாடி – மு.க.ஸ்டாலின் நேருக்கு நேர் வாக்குவாதம்

259 0

110-வது விதியின் கீழ் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கும், மு.க. ஸ்டாலினுக்கும் வாக்குவாதம் நடந்தது. முதல்-அமைச்சர் தன்னிடம் இருந்த விவரங்களை சட்டசபை செயலாளர் மூலம் மு.க.ஸ்டாலினுக்கு கொடுத்தார்.

சட்டசபையில் இன்று கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தி.மு.க. உறுப்பினர் பொன்முடி பேசினார்.அப்போது கல்வித்துறைக்கு மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதி ரூ.4,503 கோடி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார் பலவேறு துறைகளின் சார்பில் மத்திய அரசு ரூ.17 ஆயிரம் கோடி தரவேண்டி உள்ளது. அதை நாங்கள் வற்புறுத்தி உள்ளோம். விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

பொன்முடி:- 5 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிபாரிசு செய்து இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் குறிப்பிட்டார். ஆனால் முதல்-அமைச்சர் தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை வரவேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

அமைச்சர் விஜயபாஸ்கர்:- 5 இடங்களில் செங்கிப்பட்டியில்தான் மத்திய அரசு குறிப்பிட்ட அனைத்து வசதிகளும் இருப்பதாக மத்திய குழு கூறி இருந்தது. எனவே தமிழ்நாட்டில் எங்கேயாவது ஒரு இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை வரவேண்டும் என்பதற்காகத்தான் முதல்-அமைச்சர் கடிதம் எழுதி இருக்கிறார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- தமிழ்நாட்டில் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் தங்கள் பகுதியில் எல்லா வசதிகளும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். எந்த இடம் என்பது இன்னும் முடிவாகவில்லை. வாய்ப்புள்ள இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் அறிவித்த திட்டங்கள் என்ன ஆனது என்று அவர் கேட்டு இருந்தார். அதற்கான பதிலை நான் தருகிறேன்.

2011-12 முதல் 2015-16 முடிய ஐந்து ஆண்டுகளில் சட்டமன்ற விதி எண் 110-ன் கீழ் முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்ட மொத்தம் 879 அறிவிப்புகளில், 872 அறிவிப்புகளுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. மீதமுள்ள 7 அறிவிப்புகளுக்கான ஆயத்தப் பணிகள் முடிவடைந்த பின்னர் அரசாணை வெளியிடப்படும். 557 அறிவிப்புகளுக்கான திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

315 அறிவிப்புகளுக்கான திட்டப் பணிகளில் பெரும்பாலானவை முடிவுறும் தருவாயில் உள்ளன. இதில் 7 அறிவிப்புகளுக்கான திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட காரணத்தினாலும், மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளதாலும் முன்னேற்றம் இல்லாமல் நிலுவையில் இருக்கின்றன.

2016-17 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் விதி 110ன் கீழ் முதலமைச்சர் 175 அறிவிப்புகளை வெளியிட்டார். 167 அரசாணைகள் வெளியிடப்பட்டு, அப்பணிகள் அனைத்தும் தொடங்கப்பட்டு, 20 பணிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. 147 பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. 8 அறிவிப்புகளுக்கான திட்டப் பணிகள் தொடங்குவதற்கான ஆயத்தபணிகள் நடைபெற்று வருகின்றன. 3 அறிவிப்பிற்கான திட்டங்கள் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளன.  இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

உடனே எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து 110-வது விதியின் கீழ் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார்.

எடப்பாடி பழனிசாமி:- அறிவிக்கப்பட்ட திட்டங்களில் எதை பற்றி சந்தேகம் இருக்கிறதோ? அதை பற்றி விளக்கம் அளிக்க தயார்.

மு.க.ஸ்டாலின்:- திட்ட விவரங்கள் முழுவதும் உங்களிடம் இருக்கிறது. அதை எங்களிடம் தந்தால்தான் நாங்கள் கேள்வி கேட்க முடியும்.

எடப்பாடி பழனிசாமி:- ஏற்கனவே எல்லா விவரங்களையும் 110-வது விதியின் கீழ் அறிவித்துள்ளோம். அதில் எந்த திட்டம் பற்றி கேட்டாலும் விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறோம்.

தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கும், மு.க. ஸ்டாலினுக்கும் இது தொடர்பாக வாக்குவாதம் நடந்தது. உடனே எடப்பாடி பழனிசாமி தன்னிடம் இருந்த விவரங்களை சட்டசபை செயலாளர் மூலம் மு.க.ஸ்டாலினுக்கு கொடுத்தார்.

அதுபற்றி மீண்டும் விளக்கம் கேட்க மு.க.ஸ்டாலின் எழுந்தார். சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை. அதோடு இந்த விவாதம் முடிந்தது.

Leave a comment