பெண்கள் மீதான தாக்குதலுக்கு பதவி உயர்வு பரிசா?

260 0

ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன் மீது துறை ரீதியான நடவடிக்கை பாயும் என்று கருதப்பட்ட நிலையில் மாறாக அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதுடன் விமர்சனத்துக்கும் ஆளாகி இருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் கிராமம் கடந்த ஏப்ரல் 11-ந்தேதி பரபரப்புக்குள்ளானது. இந்த பரபரப்பு தமிழகம் முழுவதும் மூலை முடுக்கெல்லாம் பேசப்பட்டது.மதுவுக்கு எதிராக போராடிய ஈஸ்வரி என்ற பெண்ணை ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன் ‘பளார்’ என கன்னத்தில் அறைந்தார்.
பெண் இனத்தின் மீது தொடுக்கப்பட்ட இந்த தாக்குதலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்தன. வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் பரபரப்பாக பேசின.

கன்னத்தில் ஓங்கி அறையும் அளவுக்கு ஈஸ்வரி அப்படி எந்த பெரிய தவறும் செய்துவிடவில்லை. மதுவால் ஏற்படும் தீங்கை எதிர்த்து போராடினார்.திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் அய்யம்பாளையத்தை சேர்ந்தவர்தான் இந்த ஈஸ்வரி. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து ஏப்ரல் 1-ந்தேதி நெடுஞ்சாலையில் இருந்த அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டன. தமிழகத்தில் மட்டும் சுமார் 3000-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால் விற்பனை பாதியாக குறைந்தது.

மூடப்பட்ட கடைகளுக்கு பதிலாக புதிய மதுக்கடைகளை திறக்க அதிகாரிகள் மும்முரம் காட்டினர். புதிய மதுக்கடைகளை திறக்க விடாமல் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் காதோடு காது வைத்ததுபோல கடை பார்த்து, யாருக்கும் தெரியாமல் கடைக்காரருடன் ஒப்பந்தம் போட்டு யாரும் பார்க்காத நள்ளிரவு நேரத்தில் மதுபாட்டில்களை அடுக்கி பகலில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. புற்றீசல் போல இப்படி பல கடைகள் அடுக்கடுக்காய் முளைத்தன. இதனால் டாஸ்மாக் கடை திறக்கப்படும் என சந்தேகப்படும் இடங்களில் பொதுமக்கள் இரவிலும் கண்விழித்து டாஸ்மாக் கடைகளை வர விடாமல் காவல் காத்தனர். டாஸ்மாக் திறக்க கடை கொடுத்தவர்களும் எச்சரிக்கப்பட்டனர். இதனால் டாஸ்மாக் திறக்க கடை கொடுக்க பலர் முன்வரவில்லை.

இதனால் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள வெட்டவெளி நிலங்களில் பல டாஸ்மாக் கடைகள் திடீர் திடீரென முளைத்தன. அதற்கும் எதிர்ப்பு கிளம்பியது. மதுக்கடை திறப்பு-எதிர்ப்பு என அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் கண்ணாமூச்சி ஆட்டம் நடந்து வருகிறது.

தமிழகம் முழுவதும் மதுவுக்கு எதிரான போராட்டங்கள் உச்சக்கட்டத்தில் இருந்த நேரத்தில் தான் திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்திலும் மதுக்கடைக்கு எதிராக போராட்டம் வெடித்தது. மதுவால் சீரழிந்த குடும்பத்தினர்கள், பெண்கள் திரண்டு வந்து போராடினார்கள். அவர்களின் போராட்டத்தை தடுத்து நிறுத்த போலீசார் முயன்றனர். ஆனால் முடியவில்லை.

இதனால் தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க முடிவு செய்தனர். போலீசாரின் லத்திகள், மது வேண்டாம் என்று போராட்டம் நடத்தியவர்களை தாக்கத் தொடங்கின. லத்தி அடிக்கு பயந்து போராட்டம் நடத்தியவர்களில் ஆண்கள் சிதறி ஓடினர். தங்கள் மீது தடியடி பிரயோகம் செய்ய மாட்டார்கள் என்று கருதிய பெண்கள் சிலர் சாலையிலேயே நின்று கொண்டிருந்தனர்.

அப்போதுதான் ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன் நேரடியாக களத்தில் குதித்தார். போராட்டம் நடத்திய ஈஸ்வரியை ஓங்கி கன்னத்தில் அறைந்தார். தடியடிக்கு பிறகு போராட்டம் அந்த பகுதியில் ஓய்ந்தது. ஆனால் அந்த ‘பளார்’ ஓசை ஓயவில்லை. சமூகவலைதளங்கள் மூலமாக தமிழகம் முழுவதும் எதிரொலித்தது. கடும் எதிர்ப்பும் கிளம்பியது. அரசியல் தலைவர்கள் கொந்தளித்தனர். ஏ.டி.எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இது தொடர்பாக ஐகோர்ட்டில் பொதுநல வழக்கும் தொரப்பட்டது. இந்த சம்பவம் குறித்து திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி விசாரணை நடத்தினார். இந்த விசாரணை அறிக்கை திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது.இந்த விசாரணையின் அடிப்படையில் ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன் மீது துறை ரீதியான நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜனுக்கு போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர் ஈரோடு மாவட்ட சிறப்பு அதிரடிப்படை எஸ்.பி.யாக பதவிஉயர்வு பெற்றிருப்பது சாமளாபுரம் பகுதி மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. குறிப்பாக தாக்குதலுக்கு உள்ளான ஈஸ்வரியால் இதை ஜீரணிக்க முடியவில்லை. ஈஸ்வரி தாக்கப்பட்ட சம்பவத்துக்கு பிறகு அவரது கணவர் மனம் உடைந்து உடல் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல் நலம் பெற கடவுளே கதி என்று நினைத்து ஈஸ்வரி தனது கணவருடன் ஆனைமலை கோவிலில் 40 நாட்களாக தங்கியுள்ளார்.

தற்போது சாமளாபுரத்தில் மதுக்கடை திறக்கப் போவதாக தகவல் பரவி மீண்டும் போராட்டம் தொடங்கியுள்ளது. கணவரின் உடல் நிலையை கருதி ஈஸ்வரி அந்த போராட்டத்தில் பங்கேற்க மறுத்துவிட்டார். இந்த சூழ்நிலையில் தன்னை அடித்த ஏ.டி.எஸ்.பிக்கு பதவி உயர்வு கிடைத்திருப்பது ஈஸ்வரியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஏ.டி.எஸ்.பி. மீது துறை ரீதியான நடவடிக்கை பாயும் என்று கருதப்பட்ட நிலையில் அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. அதற்கு மாறாக பரிசளிப்பது போல அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதுடன் விமர்சனத்துக்கும் ஆளாகி இருக்கிறது.

Leave a comment