ஈரான் இராணுவத்திற்கு புதிய தளபதி நியமனம்

12 0

ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பொதுமக்கள் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் எனப் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தப் போர் நடவடிக்கையில் ஈரானின் மிக முக்கியமான இராணுவத் தலைவர்கள் இருவர் கொல்லப்பட்டதை ஈரான் அரசு உறுதி செய்துள்ளது:

அமீர் நசீர்ஜடே ஈரானின் பாதுகாப்பு மந்திரி.

முகமது பாக்பூர் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தளபதி.

கடந்த 2025-ம் ஆண்டு முன்னாள் தளபதி உசைன் சலாமி உயிரிழந்ததைத் தொடர்ந்து, புரட்சிகர காவல்படையின் முழுப் பொறுப்பையும் முகமது பாக்பூர் ஏற்றுக்கொண்டார். ஒரு வருட காலத்திற்குள் அவரும் தற்போது இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளது ஈரானிய இராணுவத்திற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

ஈரானின் முக்கிய இராணுவக் கட்டமைப்புகளைக் குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதற்குப் பதிலடியாக ஈரானும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளதால், போர் மேலும் தீவிரமடையும் என அஞ்சப்படுகிறது.

இதனை தொடர்ந்து, ஈரானின் இஸ்லாமிய புரட்சி படை எனப்படும் ஈரான் இராணுவத்திற்கு புதிய தளபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுபற்றி ஈரான் ஊடகங்கள் வெளியிட்டு உள்ள தகவலில், ஜெனரல் அகமது வாஹிதி ஈரான் படைக்கான புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.