நிச்சய
மற்ற விசா, படிப்புதற்கு அதிக செலவு ஆகியவற்றின் காரணமாக அமெரிக்க பல்கலைக்கழகங்களில் சேரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையில் 45% சரிவு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பட்டதாரி நிர்வாகச் சேர்க்கை கவுன்சில் (ஜிஎம்ஏசி) அண்மையில் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்க பல்கலைக்கழகங்களில் கடந்த ஆண்டு வரை, உயர்கல்வியில் சேரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
ஆனால், தற்போது மாணவர்கள் உயர்கல்வியில் சேர வழங்கப்படும் விசாவில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. மேலும் உயர்கல்வியில் சேர்ந்து படிப்பதற்கான செலவும் மிகவும் அதிகமாகி விட்டதால் அமெரிக்காவிலுள்ள பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் சேர்வது குறைந்துவிட்டது.
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த கல்வியாண்டில் மாணவர்கள் சேர்வது 45 சதவீதம் குறைந்துவிட்டது. அதே நேரத்தில் அமெரிக்காவைத் தவிர்த்து இந்திய மாணவர்கள் ஆசியாவிலுள்ள மற்ற நாடுகள், ஐரோப்பிய நாடுகளில் கல்வி நிலையங்களில் உயர்கல்வியில் அதிக அளவில் சேர்ந்து வருகின்றனர்.
இந்த நாடுகளில் சேரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. பிரிட்டனைத் தவிர்த்து மற்ற ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகளில் அதிக அளவில் இந்திய மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர்.
ஆசிய-பசிபிக் மண்டலத்திலுள்ள 361 வணிகக் கல்வி நிறுவனங்களில் எடுத்த ஆய்வு முடிவுகளின்படி, கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டில்(2025) இந்திய மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்துள்ளனர்.
அமெரிக்க விசா நிலைமைகளில் இருக்கும் நிச்சயமற்ற தன்மை, கல்விக்கட்டணம் அதிகரிப்பு, கல்வி நிலையங்களில் டெபாசிட் தொகை அதிகரிப்பு போன்றவற்றால் அமெரிக்க கல்வி நிறுவனங்களில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2019-ல் அமெரிக்காவில் உயர்கல்வியில் சேர்வதற்கு அமெரிக்காவைத் தவிர்த்த மற்ற நாட்டு மாணவர்களின் விருப்பம் 57 சதவீதமாக இருந்தது. இது 2025-ம் ஆண்டில் 42 சதவீதமாகக் குறைந்துள்ளது.
அமெரிக்கா, கனடா, பிரிட்டன் நாடுகளில் கொண்டு வரப்பட்ட விசா கொள்கைகள், புவிசார் அரசியல் நிலைமைகள்தான் இதற்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது. இவ்வாறு ஜிஎம்ஏசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

