உக்ரைன்- ரஷியா இடையே 4 வருடங்களை கடந்து சண்டை நடைபெற்று வருகிறது. உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. சில சமயம் ரஷியாவின் அண்டை நாடுகளின் வான் பகுதிகளிலும் ரஷியாவின் டிரோன்கள் பறப்பதாக நேட்டோ உறுப்பினர் நாடுகளான டென்மார்க் போன்றவை குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் சுவீடன் நாட்டில் உள்ள மல்மோ துறைமுகத்தில் பிரான்ஸ் நாட்டின் விமானம் தாங்கி போர்க்கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வழக்கமான நேட்டோ நாடுகளின் பயிற்சிக்காக பிரான்ஸ் போர்க்கப்பல் வந்துள்ளது.டென்மார்க்கில் இருந்து சுவீடனை பிரிக்கும் ஒரேசுந்த் ஜலசந்தியில் சுவீடன் ராணுவம் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தது. அப்போது டிரோன் ஒன்று வருவதை கண்டறிந்தனர்.
உடனடியாக அந்த டிரோனை சுட்டு வீழ்த்துவதற்கு சுவீடன் ராணுவம் தயாரானது. அதற்குள் அந்த டிரோன் மாயமானது. ஒருவேளை ரஷியா இந்த டிரோனை ஏவியிருக்கலாம் என சுவீடன் ராணுவம் சந்தேகிக்கிறது.பால்டிக் கடலில் ரஷியாவின் போர்க்கப்பல் உள்ளது.
அதில் இருந்து டிரோன் ஏவப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் சுவீடன், டென்மார்க் உடன் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.நேற்று முன்தினம் இரவு உக்ரைன் மீது ரஷியா நூற்றுக்கணக்கான டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

