“அரவிந்த் கேஜ்ரிவால், அவர் கட்சியைச் சேர்ந்த மனீஷும் சிறையில் கழித்த நாட்களை பாஜகவால் திரும்பத் தர முடியுமா? மீண்டும் டெல்லியில் தேர்தல் நடத்த முடியுமா? இதே ஃபார்முலாவை தமிழகத்திலும் செய்ய நினைக்கிறார்கள்” என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
திமுக மேற்கு மண்டல பாக முகவர்கள் பயிற்சி மாநாடு இன்று கோவையில் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியது: “வளர்ச்சி என்றாலே பிடிக்காத ஒரு கட்சியாக பாஜக இருக்கிறது. மக்கள் அவர்களை தொடர்ந்து புறக்கணிக்கிறார்கள். அதனால், அதிமுகவை தன்னுடைய கிளைக் கழகமாக மாற்றி, அதில் முன்னேறி வரலாமா என்று நினைக்கிறது பாஜக.
பிரதமர் மோடி திடீர் என்று ஜெயலலிதா புகழ் பாட ஆரம்பித்திருக்கிறார். எந்த ஜெயலலிதாவை புகழுகிறார்? “குஜராத் மோடியா? இந்த லேடியா?” என்று சவால்விட்ட அம்மையார் மீது திடீர் பாசம் இன்றைக்கு மோடிக்கு வந்திருக்கிறது.
ஜெயலலிதா விட்ட சவால் உங்களுக்கு மறந்துவிட்டதா? இல்லை, “இந்தியாவிலேயே அதிமுக அரசாங்கம்தான் ஊழல் அதிகமாக நடக்கும் அரசாங்கம்” என்று உங்களின் நம்பர் 2 அமித் ஷா பேசினாரே அதை மறந்துவிட்டீர்களா? நீங்கள் மறந்திருக்கலாம்; ஆனால், இது எதையுமே தமிழ்நாட்டு மக்கள் மறக்கவில்லை.
இதையெல்லாம், மறந்துவிட்டு அல்ல; மறைத்துவிட்டு பிரதமர் பேசுவது எதற்காக என்றால், ஒன்றிய பாஜகவின் 12 ஆண்டு கால ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு என்று எதுவுமே செய்யவில்லை. சொல்லிக் கொள்ள சொந்தமாக சாதனைகள் இல்லாததால் ஜெயலலிதாவின் புகழ் பாடினால் வாக்குகள் வருமா என்று பார்க்கிறார்.
தேர்தல் வந்துவிட்டதே என்றுகூட தமிழ்நாட்டிற்கு என்று எந்தச் சிறப்பு திட்டத்தையும் பட்ஜெட்டில் அறிவிக்க மனம் இல்லாத உங்களின் நடிப்பை தமிழ்நாட்டு மக்கள் நிச்சயமாக நம்ப மாட்டார்கள். தமிழ்நாடு உங்களிடம் கேட்பது என்ன தெரியுமா? தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவை மெட்ரோவிற்கு ஏன் அனுமதி தரவில்லை? கோயில் நகரமான மதுரை மெட்ரோவிற்கு அனுமதி கொடுத்துவிட்டீர்களா?
திருச்சி மெட்ரோவிற்கு அனுமதி வழங்க எது தடுக்கிறது? கேபினட் மீட்டிங்கில் அகமதாபாத் மெட்ரோவிற்கு அனுமதி கொடுத்த நீங்கள், தமிழ்நாடு மெட்ரோ திட்டத்திற்கு ஏன் அனுமதி தர மறுக்கிறீர்கள்? இது உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா? எங்களின் கோரிக்கைகளையும், தமிழ்நாட்டிற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்து கொண்டிருக்கும் துரோகங்களையும், ஓரவஞ்சனைகளையும் நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டு இருக்கிறேன். அதற்கெல்லாம் உங்கள் பதில் என்ன?

ஓசூர் விமான நிலையத்திற்கு அனுமதி எங்கே? சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான முழுமையான நிதியை எப்போது தருவீர்கள்? பள்ளிக் குழந்தைகளுக்கு சேர வேண்டிய 3 ஆயிரத்தி 500 கோடி ரூபாய் S.S.A. நிதியை தராமல் ஏன் இழுத்தடிப்பதற்கு என்ன காரணம்? ஜல்ஜீவன் இயக்கத்திற்கான மானியத்தை 3,548 கோடி ரூபாயை எப்போது தருவீர்கள்? ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தர வேண்டிய 2,246 கோடி ரூபாயை எப்போது தருவீர்கள்? ஒன்றிய அரசு திட்டங்களுக்கு தர வேண்டிய நிதியைக் கூட ஏன் தராமல் நிறுத்தி வைத்திருக்கிறீர்கள்? ஜி.எஸ்.டி.யால் தமிழ்நாட்டிற்கு இந்த ஆண்டு 9,600 கோடி ரூபாய் இழப்பு ஏற்படப் போகிறதே, இது அநியாயம் இல்லையா?
ரிசர்வ் பேங்கில் தமிழ்நாடு அக்கவுண்டில் இருந்த 1,709 கோடி ரூபாயை ஒன்றிய அரசு பிடித்தம் செய்தது சரியா? தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திற்கு 16,290 கோடி ரூபாய் இழப்பீட்டு நிதி வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து, கூடுதல் சுமையை ஏற்றியது சரியா?
இதையெல்லாம் செயற்கையான நிதி நெருக்கடி என்று சொல்லாமல், வேறு என்ன என்று சொல்வது? தமிழ்நாட்டின் மீது வன்மத்தோடு இப்படிப்பட்ட அநியாயங்களை செய்யும் பாஜகவோடுதான் கூட்டணி வைத்துக் கொண்டு மாபெரும் துரோகியாக இன்றைக்கு உருவெடுத்திருக்கிறார் எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி.
தமிழர் விரோதிகளும், தமிழினத் துரோகிகளும் வைத்துள்ள இந்தக் கூட்டணியை மக்கள் முன் அம்பலப்படுத்தி அவர்களுக்கு தோல்வியை நாம் பரிசாக தந்தாக வேண்டும். இதுதான் நம் முன் இருக்கும் முதல் கடமை.
பொதுவாக, தேர்தல் கூட்டணிகளின் ஆயுட்காலம் மிகவும் குறைவு. ஆனால், திமுக தலைமையிலான நம்முடைய கூட்டணி அதை உடைத்திருக்கிறோம். பாசிச பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஜனநாயக நோக்கத்துடன், 2019 தேர்தலுக்கு முன்பு தொடங்கப்பட்ட நம்முடைய கூட்டணி, தொடர்ந்து நடந்த 2021 சட்டமன்றத் தேர்தல், இடையில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல், இப்போது 2026 சட்டமன்றத் தேர்தல் வரையிலும் கொள்கை உறுதியுடன் தொடர்கிறது.
எனக்கு தெரிந்து தமிழ்நாட்டின் தேர்தல் வரலாற்றிலேயே, இவ்வளவு நீண்ட காலம் ஒற்றுமையுடன் ஒரு கூட்டணி தொடர்வது இதுதான் முதன்முறை. வளர்ச்சியிலும் சாதனைத் திட்டங்களிலும் மட்டுமல்ல, கூட்டணியிலும் நாம் வரலாறு படைத்திருக்கிறோம். “வெல்வோம் ஒன்றாக” என்று ஒவ்வொரு கூட்டத்திலும் ஏன் சொல்கிறேன் என்றால், ‘கொள்கையில்’ வெல்வோம் ஒன்றாக என்ற பொருளையும் சேர்த்துதான் அப்படி சொல்கிறேன்.

அண்மையில், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி என்ன பேசினார் என்று பார்த்தீர்களா? தேர்தலுக்காகத்தான் அவர்கள் கூட்டணியை அமைத்திருக்கிறார்களாம். சர்க்கஸ் முடிந்ததும் எவ்வாறு கூடாரத்தை பிரித்திவிடுவார்களோ, அதேபோன்று தேர்தல் முடிந்ததும் இவர்கள் மறுபடியும் ஆளுக்கொரு பக்கமாக பிரிந்து தங்களுடைய நாடகத்தை தொடர்வார்கள்.
இப்படிப்பட்ட என்டிஏ சர்க்கஸின் ரிங் மாஸ்டர்தான் பாஜக. அவர்கள் சொன்னபடி தமிழ்நாட்டு மக்கள் முன் வித்தை காட்டுபவர்தான் பழனிசாமி. பழனிசாமி, தான் என்ன பேசுகிறோம் என்று தெரிந்துதான் பேசுகிறாரா என்று எனக்கு புரியவில்லை.

