களுத்துறையில் ரப்பர் பொருட்களை உற்பத்தி செய்யும் நிலையமொன்றுக்கு சொந்தமான கிடங்கில் திடீரென தீ பரவியதால் பெரும் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான ரப்பர் பொருட்கள் தீயில் முழுவதுமாக எரிந்து நாசமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், கிடங்குக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு முச்சக்கரவண்டி, இரண்டு மோட்டார் சைக்கிள்களும் தீயில் முற்றாக எரிந்துள்ளன.
இந்நிலையில் களுத்துறை நகராட்சி மன்றத்தின் தீயணைப்புப் படையினர், பொலிஸ் அதிகாரிகள், விசேட அதிரடிப்படையினர் குடியிருப்பாளர்களின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்த முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தீ அருகிலுள்ள வீட்டுக்கும் பரவும் அபாயம் காணப்பட்டதால் அவ்வீட்டில் உள்ளவர்களும் சில தளபாடங்களுடன் விரைந்து வெளியேற்றப்பட்டனர்.
தீ விபத்துக்கான காரணத்தையும் தீயில் எரிந்த சொத்துக்களின் மதிப்பையும் கண்டறிய பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

