தலங்கம, அக்குரேகொடவில் நேற்று வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் ஹோமாகமை, பொத்துஅராவ வீதி, அத்துருகிரிய, கொட்டாவ மற்றும் மாக்கும்புர ஆகிய பகுதிளினூடாக சென்றிருப்பதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த வீதிகளில் பயணித்த வாகனங்களில் பொருத்தப்பட்ட Dash Camera, சந்தேகநபர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் EP KI-7738 என்ற பதிவு இலக்கத்தை கொண்ட காரின் இயக்கத்தைப் பதிவு செய்திருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, காரின் காட்சிகள் தங்கள் வாகன கேமராக்களில் பதிவாகியுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும், அத்தகைய காட்சிகள் இருந்தால், உடனடியாக பொலிஸாருக்கு தெரிவிக்கவும் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
அக்குரேகொடவில் உள்ள பல்பொருள் வர்த்தக நிலையமொன்றின் வாகன நிறுத்துமிடத்தில் காரில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்களால் காரில் இருந்த ஒரு தம்பதியினர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், 10 விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வழங்கப்படும் தகவல்களின் முழுமையான இரகசியத்தன்மை பராமரிக்கப்படும் என இலங்கை பொலிஸ் மேலும் தெரிவித்துள்ளது.
தொலைபேசி இலக்கங்கள்
பிரதி பொலிஸ் ஆய்வாளர், மேல் மாகாணம், தெற்கு பிரிவு – 071 8598008
பணிப்பாளர், மேல் மாகாணம், தெற்கு குற்றப் பிரிவு – 071 8592279

