தலங்கம – அக்குரேகொட பகுதியில் வெள்ளிக்கிழமை (13) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அக்குரேகொட பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் வாகன தரிப்பிடத்திற்கு அருகில் மாலை 05.00 மணியளவில் காரில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் , ஜீப் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் ஜீப் வாகனத்தில் இருந்த சட்டத்தரணியும் அவரது மனைவியும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் பிட்டிகல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு ரி56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சட்டத்தரணி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “ கரந்தெனிய சுத்தா” என்பவருக்குச் சொந்தமான வழக்குகளை விவாதிக்கும் சட்டத்தரணி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் துப்பாக்கிதாரிகள் ஜீப் வாகனத்தின் மீது 10 தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

