13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதே நடைமுறையில் சாத்தியமான விடயமாகும்

5 0

13ஆவது திருத்தச்சட்டம் அரசியலமைப்பில் காணப்படுகின்ற நிலையில் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவது பற்றியே தற்போது அவதானம் செலுத்த வேண்டும். அதனை தவிர்த்து புதிய அரசியலமைப்பை உருவாக்குவது பற்றிய உரையாடலை ஆரம்பிக்கின்றபோது நடைமுறையில் சாத்தியமாகாத நிலைமையே மீண்டும் உருவாகும் என்று முன்னாள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.
இலங்கை மன்றக்கல்லூரியில் வன்டெக்ஸ்ட் இன்னிஸியேட்வின் ஏற்பாட்டில் நடைபெற்ற பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின்  ‘இலங்கையில் சமாதானப்பேச்சுவார்த்தை முன்னெடுப்பு: ஒரு உள்ளக பார்வை’ எனும் நூல் பற்றி நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

சுதந்திர இலங்கையில், சமஷ்டி தீர்வு பற்றி உரையாடலை பண்டாரநாயக்க ஆரம்பித்திருந்தார். ஆனால் அதன்பின்னர் அந்த உரையாடல் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் கூர்ப்படைந்திருந்த நிலையில் தனி நாட்டை உருவாக்குவது பற்றியதாகவே இருந்தது. அத்துடன் வன்முறைகள் நிறைந்ததாகவும் இருந்தது. இந்த வரலாற்றை நாம் அனைவரும் அறிவோம்.

ஆயுதங்களை ஏந்திய தமிழீழ விடுதலைப்புலிகள் தனிநாடு தான் இறுதியான தீர்வு என்பதில் உறுதியாக இருந்தார்கள். அத்தகைய நிலைப்பாடுகளை உடைய தரப்பினருடன் பேச்சுவார்த்தைக்கு செல்வது என்பது மிகவும் முக்கியமான விடயமாகும். அந்தவகையில் பேராசிரியர் பீரிஸ் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டமையானது மிகவும் முக்கியமானது.

ஆனால் இறுக்கமான நிலைப்பாடுடைய ஒரு தரப்பினருடன் பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்திருந்து அதன் ஊடாக தீர்வினை பெற முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருப்பது மிகவும் வேடிக்கையானது.

ஏனென்றால் தமிழீழ விடுதலைப்புலிகளின் சார்பில் அன்டன் பாலசிங்கம் மட்டுமே பேச்சுவார்த்தை மேசைக்கு பொருத்தமானவராக இருந்தார். அவரால் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் நிலைப்பாடுகளை மாற்றக்கூடிய முழுமையான இயலுமை காணப்பட்டிருக்கவில்லை.

அவ்வாறானதொரு தரப்புடன் பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்திருந்து பேசுவது என்பது மிகவும் கடினமானதொரு விடயம். அந்தப்பணியை பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் செய்திருந்திருக்கின்றமை பாராட்டக்கூடிய விடயமாகும்.

ஆனால் அவர் பேச்சுவார்த்தை மேசையில் எந்த நம்பிக்கையுடன் இருந்தார் என்பது பற்றிய கேள்விகள் என்னிடத்தில் இன்னமும் இருக்கின்றன. இவ்வாறான நிலையில் இறுக்கமான நிலைப்பாட்டில் இருந்த விடுதலைப்புலிகளுக்கு ஈற்றில் அவர்களின் நிலைப்பாட்டின் பிரகாரமே பதிலளிக்கப்பட்டது.

அதனை தவிர்க்க முடியாது. ஏனென்றால் எந்தவொரு விட்டுக்கொடுப்புக்கும் தயாராக இல்லாத தரப்பு ஈற்றில் தனது நிலைப்பாட்டாலேயே முடிவுக்கு வருவது இயற்கையானது. அது தான் புலிகளுக்கு நடந்தது.

தற்போதைய நிலையில் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் முழுமையாக தீர்க்கப்படவில்லை. அதுபற்றிய உரையாடல்கள் காணப்பட்டாலும் செயற்பாடுகள் இல்லை. இதற்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்கப்போவதாக கூறுகின்றார்கள்.

என்னைப் பொறுத்தவரையில் 13ஆவது திருத்தச்சட்டம் அரசியலமைப்பில் உள்ளது. அதனை  முழுமையாக அமுலாக்குவதன் ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வினைக் கண்டு கொள்ள முடியும். அதனைவிடுத்து ஒற்றையாட்சியை நீக்குகின்றோம், முறைமையை மாற்றுகின்றோம் என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கின்ற எந்தவொரு செயற்பாடுகளும் நடைமுறையில் வெற்றி பெறுவது மிகவும் கடினமான விடயமாகும்.

ஆகவே தான் 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக அமுலாக்குவதோடு மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதன் ஊடாக கணிசமான பிரச்சினைகளுக்கு முடிவுக்கு கொண்டுவர முடியும் என்பது எனது நிலைப்பாடாகும் என்றார்.