நீதிமன்ற கட்டமைப்பை அரசியல் மயப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. இது முற்றிலும் தவறானதொரு செயற்பாடாகும். எமது ஆட்சியில் நீதித்துறை சுயாதீனமாகவே செயற்பட்டது. நீதிமன்றங்கள் மீது எமக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (13) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியது. அந்த வாக்குறுதிகள் ஏதும் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை. மாறாக அரசியல் பழிவாங்கல்களுக்கு மாத்திரமே முன்னுரிமை வழங்கப்படுகிறது.
எம்மை சிறைக்கு அனுப்புவதாலோ அல்லது நெருக்கடிக்குள்ளாக்குவதாலோ பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவும் முடியாது. ஆகவே மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல 2022 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தற்போது மரண தண்டனை வழங்கியுள்ளது. இது வரவேற்கத்தக்கது.
அமரகீர்த்தி அதுகோரலவின் மரணத்தை நியாயப்படுத்தும் தரப்பினர் அரசாங்கத்தில் உள்ளார்கள். இது முற்றிலும் தவறானது.அரசியல் கட்டமைப்பின் மீது தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் தான் வெறுப்பை ஏற்படுத்தினார்கள்.அதன் விளைவாகவே முழு நாடும் பற்றி எரிந்தது.
அரசாங்கம் நீதிமன்ற கட்டமைப்பை அரசியல்மயப்படுத்த முயற்சிக்கிறது. அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.எமது ஆட்சியில் நீதிமன்றங்கள் சுயாதீனமாகவே செயற்பட்டது. எம்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு நீதிமன்றங்கள் ஊடாகவே தீர்வு பெற்றுக்கொள்வோம் என்றார்.

