புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி மற்றும் ரெங்கம்மாள் சத்திரத்தில் நரிக்குறவர் இன மக்கள் வசிக்கும் குடியிருப்புகளில் 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட வீடுகள் கட்டும் பணி முழுமை அடையாததால் மக்கள் வீதியில் குடியிருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கந்தர்வக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ரெங்கம்மாள்சத்திரம் மற்றும் கறம்பக்குடியில் நரிக்குறவர் (பழங்குடியினர்) இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் தேர்வு செய்யப்பட்ட சில குடும்பத்தினருக்கு 2022-23-ல் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் தலா ரூ.2.10 லட்சத்தில் 107 வீடுகள் கட்டும் பணி தொடங்கியது.
ஆனால், 3 ஆண்டுகளைக் கடந்தும் வீடுகள் முழுமையாக கட்டப்படாமல், அனைத்து வீடுகளுமே பாதியில் நிற்கின்றன. இதனால், வீடுகளின்றி வீதியில் குடியிருக்கும் அவல நிலை அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

