தவெகவுக்கு ஆதரவு அளிக்க ஊர்க்காவல் படை வீரர்கள் முடிவு – காரணம் என்ன?

12 0

தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றாததால் வரும் தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு அளிக்க ஊர்க்காவல் படை வீரர்கள் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் தங்களது கோரிக்கை மனுவை தவெக தேர்தல் அறிக்கை தயாரிப்பு கருத்துகேட்பு கூட்டத்தில் அளித்துள்ளனர்.

தமிழகத்தில் 16,500 ஊர்க் காவல் படை வீரர்கள் உள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள். இவர்களுக்கு மாதத்துக்கு அதிகபட்சம் 15 நாட்களும், குறைந்தபட்சம் 10 நாட்களும் பணி வழங்கப்படுகிறது.

ஒருநாள் பணிக்கு ரூ.560 ஊதியமாக வழங்கப்படுகிறது. இதனால், அதிகபட்சமாக 15 நாட்களுக்கு ரூ.8,400 மட்டுமே மாத ஊதியமாக கிடைக்கிறது. அதுவும் குறித்த நேரத்தில் ஊதியம் வருவதில்லை எனவும், விலைவாசி விண்ணை முட்டும் தற்போதைய காலகட்டத்தில், இந்த ஊதியத்தை வைத்து குடும்பத்தை நடத்த முடியாமல் திணறுவதாகவும் ஊர்க்காவல் படையினர் தெரிவிக்கின்றனர்.

இவர்களின் நிலையை அறிந்த திமுக, தங்களது கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில், ‘‘ஊர்க்காவல் படை வீரர்களுக்கு பணி நாட்கள் அதிகரிக்கப்படும். ஊதியமும் உயர்த்தி வழங்கப்படும்” என்று அறிவித்திருந்தது. ஆனால், ஆட்சி முடிவடையும் தருவாயில் கூட தங்கள் கோரிக்கை நிறைவேறவில்லை என ஊர்க்காவல் படை வீரர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், திருச்சியில் தவெக தேர்தல் அறிக்கைதயாரிப்புக்குழு தலைவர் அருண்ராஜ் தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டம் பிப்.9-ம் தேதி நடைபெற்றது. அப்போது ஊர்க்காவல் படை வீரர்கள் சிலர் தங்களது கோரிக்கையை எழுத்துப்பூர்வமாக வழங்கியுள்ளனர்.

அதில், ‘ஊர்க்காவல் படை வீரர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கும் வகையில் மாதந் தோறும் 25 நாட்களுக்கு குறையாமல் பணி வழங்க வேண்டும். நாளொன்றுக்கு ரூ.1,000 ஊதியமாக வழங்க வேண்டும்.

விபத்தில் உயிரிழந்தால் ரூ.3 லட்சம் வழங்க வேண்டும். ஓய்வுக்கு பின்னர் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தமிழக காவல் துறைபோல தோள்பட்டை பேட்ஜ் மற்றும் சீருடைகள், காலணிகள் வழங்கவேண்டும்’’ என்று அதில் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மனு கொடுத்தவர்களிடம் கேட்டபோது, ‘‘வரும் பட்ஜெட்டில் எங்களுக்கு சாதகமான அறிவிப்புகள் ஏதும் வராதபட்சத்தில், தவெகவின் தேர்தல் அறிக்கையில் எங்களது கோரிக்கைகள் இடம்பெறும்பட்சத்தில் ஊர்க்காவல் படையினர் அனைவரும் எங்களது குடும்பத்தினருடன் தவெகவுக்கு ஆதரவளிப்பார்கள்’’ என்று தெரிவித்தனர்.