கிளிநொச்சியில் சுகாதாரக் குறைபாடுகளுடன் இயங்கிய உணவகங்களை தற்காலிகமாக மூடுமாறு நீதிமன்றம் உத்தரவு

10 0

கிளிநொச்சி, கண்டவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட கண்டவளை, பரந்தன் மற்றும் தர்மபுரம் ஆகிய பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவுகளில் கடந்த 02, 03 மற்றும் 05ஆம் திகதிகளில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் குழுவினால் விசேட சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது சுகாதாரக் குறைபாடுகளுடன் காணப்பட்ட உணவு கையாளும் நிலையங்களுக்கு எதிராக நேற்று செவ்வாய்க்கிழமை (10) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், பரந்தன் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய ஐந்து பலசரக்குக் கடைகள், நான்கு உணவகங்கள் மற்றும் இரண்டு வெதுப்பகங்களுக்கு (Bakery) மொத்தமாக 360,000 ரூபாய் தண்டப்பணம் விதித்தது. அத்துடன், குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் வரை இரண்டு உணவகங்கள் மற்றும் ஒரு வெதுப்பகத்தைப் பதினான்கு நாட்களுக்குத் தற்காலிகமாக மூடுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், கண்டவளைப் பகுதியில் இரண்டு பலசரக்குக் கடைகளுக்கு 35,000 ரூபாய் தண்டப்பணமும், தர்மபுரம் பகுதியில் ஒரு பலசரக்குக் கடைக்கு 10,000 ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டது. தர்மபுரம் பகுதியில் உள்ள இரண்டு உணவகங்களுக்கு 125,000 ரூபாய் தண்டப்பணம் விதித்த நீதிமன்றம், குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் வரை அந்த உணவகங்களையும் 14 நாட்களுக்குத் தற்காலிகமாக மூடுமாறு உத்தரவிட்டது.