திருகோணமலை கடற்கரை சட்டவிரோத கட்டுமானம் மற்றும் சர்ச்சைக்குரிய புத்தர்சிலை விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 4 பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 10 பேருக்கும் பல நிபந்தனையின்கீழ் திருகோணமலை மேல் நீதிமன்றம் புதன்கிழமை (11) பிணை வழங்கியது.
குறித்த சம்பவம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 10 பேரும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையிலும், பத்தாயிரம் ரூபா பெறுமதியான காசுப்பிணையிலும் பல முக்கிய நிபந்தனையின் கீழும் மேல் நீதிமன்றால் இன்றைய தினம் (11) பிணை வழங்கி விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த வழக்கானது நீதவான் நீதிமன்றில் மீண்டும் எதிர்வரும் 17.06.2026 அன்று விசாரணைக்காக திகதியிடப்பட்டுள்ளது.
குறித்த வழக்கானது இன்றையதினம் (11) காலை திருகோணமலை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது மேல் நீதிமன்றில் இடம்பெற இருந்த வழக்கிற்காக மாலை வரை ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பின்னர் மேல் நீதிமன்றில் குறித்த வழக்கானது விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோதே மேல் நீதிமன்றினால் குறித்த நபர்கள் பல நிபந்தனையின்கீழ் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
மீண்டும் குறித்த வழக்கானது மாலையளவில் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது குறித்த வழக்கு தொடர்பில் எதிரிகளாக குறிப்பிட்டு வழக்கில் முன்னிலையாகாத 4 பேரையும் எதிர்வரும் வழக்குத் தவணையின்போது முன்னிலையாகுமாறும், சர்ச்சைக்குரிய புத்தர்சிலையை கொண்டு வந்த வாகனத்தை துறைமுக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
மேல் நீதிமன்றினால் வழங்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி, மேற்படி வழக்கு தொடர்பில் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் நடைபெறும் அனைத்து வழக்குத் தவணைகளுக்கும் எதிராளிகள் அனைவரும் தவறாது சமூகமளிக்க வேண்டும், வழக்கு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், குறித்த வழக்கு முழுமையாக முடிவுறுத்தப்படும்வரை வழக்கு தொடர்பாக எங்கும் விமர்சிக்கக்கூடாது, இந்த வழக்கின் வழக்காளி மற்றும் சாட்சிகள் எவரையும் அச்சுறுத்தல் மற்றும் இடையூறுகளை ஏற்படுத்தக்கூடாது, இந்த காலப்பகுதியில் பிரதேசத்தில் எவ்விதமான பொது அமைதிக்கோ, சமய சமய சகவாழ்வுக்கோ இடையூறு எதனையும் ஏற்படுத்தக்கூடாது. இவற்றில் ஒன்றை அல்லது அனைத்தையும் மீறினால் வழங்கப்பட்டுள்ள பிணை இரத்து செய்யப்பட்டு மீண்டும் விளக்கமறியல் உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் குறித்த நிபந்தனைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருகோணமலை பிரதான டச்பே கடற்கரை பகுதியில் கடற்கரையில் இருந்து சுமார் 11 மீற்றருக்கு உட்பட்ட பகுதியில் கடந்த வருடம் 2025 நவம்பர் மாதம் 16, 17ஆம் திகதிகளில் சட்ட விரோதமான முறையில் கட்டுமானத்தை மேற்கொண்டார்கள் எனவும் புத்தர் சிலையை நிறுவி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் திருகோணமலை துறைமுக பொலிஸாரினால் கடலோரப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் 28 (01) மற்றும் 14 (01) போன்ற சட்ட விதிகளுக்கு அமைவாக திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் 17.11.2025 அன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கானது 26.11.2025 அன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது எதிராளிகள் தரப்பில் எவரும் முன்னிலையாகி இருக்கவில்லை. பின்னர் 14.01.2026 அன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது முன்னிலையாகி இருந்த கல்யாண வன்ச திஸ்ஸ தேரர், பலாங்கொட கஞ்சப தேரர், திருகோணமலை சுவித வன்ச திஸ்ஸ தேரர், நந்த தேரர் ஆகிய 4 பௌத்த பிக்குகள் உட்பட சிவில் சமூகத்தினர் ஐவருமாக ஒன்பது பேரையும் 19.01.2026 வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
பின்னர் குறித்த வழக்கானது 19.01.2026 அன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது மேலும் ஒரு எதிராளி சரணடைந்திருந்ததுடன் எதிராளிகள் சார்பில் கோரப்பட்ட பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு 10 பேருக்கும் விளக்கமறியல் 28.01.2026 வரை நீடிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் குறித்த வழக்கினை நிராகரிக்கக்கோரி எதிரிகளால் வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் அது பெப்ரவரி 3ஆம் திகதி தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.
தொடர்ந்து குறித்த வழக்கானது பெப்ரவரி 02, பெப்ரவரி 09 ஆகிய திகதிகளில் விசாரணைக்காக அழைக்கப்பட்டதுடன் கடந்த 9ஆம் திகதி திருகோணமலை மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் (11) குறித்த வழக்கில் எதிரிகளாக குறிப்பிடப்பட்டுள்ள 4 பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 10 பேரும் தலா 10 இலட்சம் பெறுமதியான இரு சரீரப் பிணையிலும், பத்தாயிரம் ரூபா பெறுமதியான காசுப்பிணையிலும் மேல் நீதிமன்றினால் பிணை வழங்கி விடுதலை செய்யப்பட்டனர்.

