தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்த வழக்கு முடித்து வைப்பு!

15 0

 தூய்மைப் பணியாளர் பிரச்சினையில் உழைப்போர் உரிமை இயக்கத்துக்கும், சென்னை மாநகராட்சிக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டதை எடுத்து, தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை முடித்து வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை மாநகராட்சியில் ராயபுரம் மற்றும் திருவிக நகர் மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உழைப்போர் உரிமை இயக்கம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் சி.குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது உழைப்போர் உரிமை இயக்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமாரசாமி, மேமோ ஒன்றை தாக்கல் செய்தார். அதில், சென்னை மாநகராட்சியின் ஐந்து மற்றும் ஆறாவது மண்டலங்களில் உள்ள சுய உதவிக்குழுவின் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் 1,400 பேரை நான்கு மற்றும் எட்டாவது மண்டலங்களில் மீண்டும் பணியமர்த்த பெருநகர சென்னை மாநகராட்சி ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், தொழிலாளர் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள மூன்று விவகாரங்களை அங்கேயே தொடர்ந்து நடத்துவது என இரு தரப்பும் முடிவு செய்துள்ளதால், வழக்கை முடித்து வைக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், உழைப்போர் உரிமை இயக்கம் தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.