போதைப்பொருள் பயன்படுத்தும் சேவையாளர்களினால் பொது பயணிகள் வீதி போக்குவரத்து சேவையின் அனுமதிப்பத்திரத்தை அரசாங்கம் இரத்துச் செய்தால் முழு போக்குவரத்து கட்டமைப்பும் ஸ்தம்பிதமடையும். எம்மை சீண்டிப்பார்க்க வேண்டாம் என்று அமைச்சரிடம் குறிப்பிட்டுக் கொள்கிறோம். அனுமதி பத்திரத்தை இரத்துச் செய்தால் பாரிய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன எச்சரிக்கை விடுத்தார்.
போதைப்பொருள் பயன்படுத்திக் கொண்டு பேரூந்து செலுத்தும் சேவையாளர்களை குறித்த பேரூந்தின் உரிமையாளர்கள் நன்கு அறிவார்கள். உரிமையாளர்கள் இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்க கூடாது.
அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காவிடின் தனியார் பேருந்துகளுக்கான உரிம அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன திங்கட்கிழமை கொழும்பில் உள்ள தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் காரியாலயத்தில் ஊடக சந்திப்பை நடத்தி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் போதைப்பொருள் பயன்படுத்துதை ஆராய்வது பேருந்து உரிமையாளர்களின் பணியல்ல, அதற்கு தான் பொலிஸார் உள்ளார்கள். போதைப்பொருளை பாவிக்கும் பேருந்து சாரதிகள், நடத்துனர்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுத்தால் அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் அனைவரும் போதைப்பொருள் பயன்படுத்துவதாக போக்குவரத்து அமைச்சர் குறிப்பிட்டுள்ளது முற்றிலும் தவறானது. எழுமாற்றாக கூட அவரால் பிறிதொருவர் மீது குற்றஞ்சாட்ட முடியாது.
சட்டத்தை முறையாக செயற்படுத்துவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிடுகிறார். அவ்வாறாயின் 323 கொள்கலன் விடுவிப்புக்கு என்னவாயிற்று, முன்னாள் சபாநாயகர் அசோக்க ரன்வெல்லவின் திருட்டு கல்வி பட்டத்துக்கு என்னவாயிற்று, சட்டத்தை அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்துவதாக எம்மிடம் குறிப்பிட வேண்டாம்.
பொது பயணிகள் சேவை பேருந்து வீதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் போது பல நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது. புதிய சட்டங்கள் மற்றும் சுற்றறிக்கைகயை தயாரிப்பதற்கு நாங்கள் எதிப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் அவை அனைத்தும் முறையானதாக இருத்தல் வேண்டும்.
எம்மை சீண்டிப்பார்க்க வேண்டாம் என்று அமைச்சரிடம் குறிப்பிட்டுக் கொள்கிறோம். அமைச்சரின் கருத்து அடிப்படை மனித உரிமை மீறலாகும். அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்யுங்கள் முழு போக்குவரத்து கட்டமைப்பும் ஸ்தம்பிதமடையும். நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என்றார்.

