பொகவந்தலாவ, கொட்டியாகலை தோட்டத்தின் மேல் பிரிவில் (Field No 03) காட்டு பன்றிகள் மற்றும் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த பொறியில் சிக்கி, சுமார் 4 அடி நீளமான அரிய வகை மலைச் சிறுத்தையொன்று உயிரிழந்துள்ளது.
தோட்டத் தொழிலாளி ஒருவர் செவ்வாய்க்கிழமை (10) அதிகாலை இதனைக் கண்டு பொகவந்தலாவ பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
உயிரிழந்த சிறுத்தை நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதுடன், மேலதிக பரிசோதனைகளுக்காக ரந்தெனிகல மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இவ்வாறான சட்டவிரோத வேட்டையாடல் முறைகளால் எமது நாட்டின் அரிய வகை உயிரினங்கள் அழிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொறியிட்ட நபரைக் கண்டறிய வனவிலங்கு அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்த சிறுத்தை ஹட்டன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் கொண்டு செல்லப்பட்டு நீதிவான் உத்தரவுக்கமைய உடற்கூற்று பரிசோதனைக்காக ரந்தெனிகல மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபடவுள்ளது என நல்லதண்ணி வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

