முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயாத்திட்டத்தால் புதிய குடியற்றங்கள் வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்போவதில்லை என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்வதோடு குறித்த திட்டத்துக்குள் தமிழர்களையும் உள்வாங்குவது தான் எமது இலக்காக உள்ளது என்று கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்தார்.
கிவுல் ஓயாத் திட்டம் சம்பந்தமாக அடுத்தகட்டமாக அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள செயற்பாடுகள் தொடர்பில் வீரகேசரியிடம் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிவுல் ஓயாத்திட்டமானது 2007ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டு 2011ஆம் ஆண்டு முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அத்தனை தலைவர்களும் இத்திட்டத்தினை முன்னெடுப்பதற்குரிய செயற்பாடுகளை மேற்கொண்டனர்.
துரதிஷ்டவசமாக குறித்த திட்டத்தினை முன்னெடுப்பதற்குரிய நிதி ஒதுக்கீடுகள் முறைமையாக காணப்படவில்லை. அதனடிப்படையில் தான் அத்திட்டத்தினை முறையாக நகர்த்தியிருக்க முடியவில்லை.
மேலும் குறித்த திட்டமானது கொழும்பில் இருந்து திட்டமிட்டு அமுல்படுத்துவதற்கு முயல்வதால் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு அச்சமான நிலைமைகள் காணப்படுகின்றன.
1983இலிருந்து நீர்ப்பாசன திட்டங்களைப் பயன்படுத்தி குடியேற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் தமிழ் மக்கள் மத்தியில் அவ்விதமான அச்சம் ஏற்படுவது இயல்பானது, ஆனால் முல்லைத்தீவு மாவட்டத்திலும், வவுனியா மாவட்டத்திலும் நீர்ப்பாசனத்தினை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட குடியேற்றங்களில் வாழ்ந்த மக்கள் அங்கு வாழ முடியாத நிலைமையால் வெளியேறி விட்டார்கள் என்பது தான் யதார்த்தமாகும்.
அவர்களின் வாழ்வாதாரத்துக்கான நீர் வசதிகள் இல்லாமையால் அவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டார்கள். இந்நிலையில் தற்போது கரைத்துறைப்பற்று, வவுனியா வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் வாழும் தமிழ் மக்களும் விவசாயத்தினை மேற்கொள்கின்றார்கள்.
அதேபோன்று ஜனக்கபுர உள்ளிட்ட பகுதிகளில் வாழும் சிங்கள மக்களும் விவசாயத்தினை மேற்கொள்கின்றார்கள். ஆகவே அவர்களின் வாழ்வாதாரத்தினையும் கவனத்தில் கொண்டு தமிழ் மக்களையும் உள்ளீர்த்து நாம் கிவுல் ஓயாத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கின்றோம். இந்த திட்டத்தினை முன்னெடுப்பதால் எவ்விதமான குடியேற்றங்களும் செய்யப்படப்போவதில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

